நாடு முழுவதும் கடந்த ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரியின் மூலம் முதல்மாதத்தில் அரசுக்கு ரூ. 42 ஆயிரம் கோடி வரிவசூலாகியுள்ளது.

இன்னும் வரிசெலுத்தும் நாட்கள் இருப்பதால் வரிவருவாய் மேலும் அதிகரிக்கும் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

 மறைமுக வரிகளை நீக்கி, நாடுமுழுவதும் ஒரே மாதிரி வரியாக சரக்கு மற்றும் சேவை வரியை கடந்த ஜூலை 1-ந் தேதி மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதில் ஜூலை, மாதத்துக்கான ரிட்டன் தாக்கலை ஆகஸ்ட் மாதம் 25ந் தேதிக்குள் தாக்கல் செய்யலாம் என அரசு அறிவித்தது.

இந்நிலையில், கடந்த வாரத்தில் இருந்து ஜி.எஸ்.டி. வரி ரிட்டனைதொழிற்சாலைகள், வர்த்தகர்கள், நிறுவனங்கள் செலுத்தி வருகின்றன. இதில் இப்போது வரை முதல்மாதத்தில் ரூ.42 ஆயிரம் கோடி வசூலாகியுள்ளது.

இது குறித்து மத்திய நேரடிவரிகள் வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. வரி(ஐ.ஜி.எஸ்.டி.) வரி மூலம், ரூ. 15 ஆயிரம் கோடியும், புகையிலை உள்ளிட்ட உடல் நலக்கேடு விளைவிக்கும் பொருட்களில் இருந்து ரூ. 5ஆயிரம் கோடியும் வசூலாகியுள்ளது.

மத்திய ஜி.எஸ்.டி., மாநில ஜி.எஸ்.டி வரியாக ரூ.22 ஆயிரம்கோடி வரியாக வந்துள்ளது. தற்போது வரை  10லட்சம் பேர் வரிசெலுத்துபவர்கள் ரிட்டன் தாக்கல் செய்துள்ளனர். மேலும், 20 லட்சம் பேர் ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும். எங்கள் கணக்குப்படி, 95 சதவீதம்பேர் ரிட்டன் தாக்கல் செய்துவிடுவார்கள்’’ எனத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் உற்பத்தி வரியாக ரூ.31 ஆயிரத்து 782 கோடியும், சேவை வரியாக ரூ.19 ஆயிரத்து 600 கோடியும் வசூலானது. இந்த ஆண்டு ஜி.எஸ்.டி. வரியோடு, மாநில அரசுகளின் வரியும் சேர்க்கப்படும் பட்சத்தில் வரிவசூல் அதிகரிக்கும். மேலும், 72 லட்சம் வரி செலுத்துபவர்களில் 50 லட்சம் பேர் ஜி.எஸ்.டி.க்கு மாறிவிட்டனர். 15 லட்சம் பேர்  புதிதாக பதிவு செய்துள்ளனர், ஒட்டுமொத்தமாக கணக்கிடும்போது, ஜூலை மாதத்தில் 60 லட்சம் பேர் ஜி.எஸ்.டி.ரிட்டன் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், குறிப்பிட்ட தேதிக்குள் வரி செலுத்தாமல் இருக்கும் வர்த்தகர்கள், தொழில்நிறுவனங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.100 அபராதமும், அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும என்பது குறிப்பிடத்தக்கது.