Asianet News TamilAsianet News Tamil

கடல்சார் பாதுகாப்புக்காக மொரீஷியசுக்கு ரூ. 3,227 கோடி நிதியுதவி  பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

Financial assistance for moricius . PM Narendra Modi announce
Financial assistance for moricius . PM Narendra Modi announce
Author
First Published May 27, 2017, 8:48 PM IST


இந்திய பெருங்கடல் பகுதியில் கடல் சார் பாதுகாப்பில் ஒத்துழைப்பதற்காக மொரீஷியஸ் நாட்டுக்கு ரூ. 3,227 கோடி கடனுதவி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜெகன்நாத் தனது மனைவியுடன் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். நேற்று காந்தி சமாதிக்கு சென்ற அவர், அங்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இதன்பின்னர் அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி மதிய விருந்தை அளித்தார். இதன் தொடர்ச்சியாக இரு தலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது, இரு தரப்பு உறவுகள், வர்த்தகம், கடல்சார் பாதுகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது. இதன் பின்னர் இரு தலைவர்களும் கூட்டறிக்கை வெளியிட்டனர்.

மோடி வெளியிட்ட அறிக்கையில், இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியாவும் மொரீஷியசும் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து நானும், ஜெகன்நாத்தும் பேசினோம். கடற்கொள்ளையர்கள் மற்றும் கடல் பகுதியில் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக வர்த்தகம், சுற்றுலாத்துறை பாதிக்கப்படுகிறது.

ஆட்கடத்தல், போதைப்பொருள் கடத்தல், சட்ட விரோத முறையில் மீன் பிடித்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் நம் நாட்டின் வளங்கள் சுரண்டப்படுகிறது. இதுதொடர்பாக மொரீஷியஸ் உடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம்.

இதன் மூலம், இந்திய பெருங்கடலில் இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயல்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்படும். இதுதொடர்பாக மொரீஷியஸ் நாட்டுக்கு ரூ. 3,227 கோடி கடனுதவி வழங்கப்படும்.

அந்நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. இந்த கடனுதவி இந்தியா கொண்டிருக்கும் நல்லெண்ணத்திற்கு ஓர் உதாரணம். மொரீஷியஸ் நாட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை எண்ணி இந்தியா பெருமை கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜெகன்நாத் விடுத்துள்ள அறிக்கையில், இந்திய பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பதற்கு இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயல்படுவது அவசியம்.

தொடர்ச்சியான கண்காணிப்பு நடத்துவதன் மூலமாக இந்திய பெருங்கடல் பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க முடியும். பாதுகாப்பு துறையில் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமான உறவை மொரீஷியஸ் கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி கடந்த 2015-ல் மொரிஷீயசில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது, இந்தியாவின் உதவியோடு நிர்மாணிக்கப்பட்ட ரோந்துக்கப்பலை அந்நாட்டுக்கு வழங்கினார்.

இதனை குறிப்பிட்ட மொரீஷியஸ் பிரதமர், இந்தியா அளித்த ரோந்துக்கப்பல் மிகுந்த பயனுள்ள வகையில் இருப்பதாகவும், கடலோர பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள உதவுவதாகவும் குறிப்பிட்டார். மேலும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உறுப்பினர் ஆகுவதற்கு

மொரீஷியஸ் தனது ஆதரவை அளிக்கும் என்று அந்நாட்டு பிரதமர் ஜெகன்நாத் உறுதி அளித்தார்.

மொரிஷியஸ் நாட்டில் இந்தியாவின் நிதியுதவியுடன் மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட்டு நிறைவுபெறுத் தருவாயில் உள்ளது. அங்குள்ள கியூர்பைப் நகரத்துக்கும் போர்ட் லூயிஸ் நகருக்கும் இடையே ரெயில் இயக்கப்படவுள்ளது.

19 நிலையங்களை இந்த ரெயில் இணைக்கும் மெட்ரோ ரெயில் சேவை அந்நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கினை வகிக்கும் என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக 120 நாடுகளை ஒருங்கிணைத்து சர்வதேச சோலார் (சூரிய சக்தி பயன்பாடு) கூட்டணியை இந்தியா அமைத்தது. இதில் மொரீஷியசும் ஓர் உறுப்பினர். இந்நிலையில், சோலார் திட்டம் அந்நாட்டில் முழு வீச்சில் செயல்படுத்தப்படுகிறது என்று அதன் பிரதமர் பிரவிந்த் ஜெகன்நாத் தெரிவித்தார்.

 

 

 

 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios