தெலுங்கானாவில் கஷிபுக்கா பகுதியில் உள்ள பட்டாசு  ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். பலர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தெலுங்கானா மாநிலத்தில் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள கஷிபுக்கா பகுதியில், இமாமுலா மார்க்கெட் சாலையில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் 15-க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் வேலை பார்த்து வந்த பல ஊழியர்கள் சிக்கிக்கொண்டனர்.  இதில் சிக்கி 11 பேர் உயிரிாந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். மீட்பு நடவடிக்கையில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. பட்டாசு ஆலை தீ விபத்தில் சிக்கி இறந்தவர்கள் குடும்பத்துக்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தேவையான உதவிகளை விரைந்து அளிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.