டிமானிட்டைசேஷன் மற்றும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு ஆகியவற்றால் வீழ்ச்சி அடைந்த இந்திய பொருளாதாரம் தற்போது மீண்டுவிட்டதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

கறுப்புப்பணம், கள்ளநோட்டு, ஊழல் ஆகியவற்றை ஒழிப்பதற்காக, கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார்.

இதேபோல், நாடு முழுவதும் ஒரே சீரான வரி வசூல் முறையை அமல்படுத்தும் நோக்கில் சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி. அறிமுகம் செய்யப்பட்டது. மத்திய அரசின் இந்த இரு நடவடிக்கைகளால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும், நாடு பின்னோக்கி சென்றுவிட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு ஆசியாவில் தொடர்ந்து வேகமாக வளரும் நாடாக இந்தியா இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக இந்திய பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டிருந்த சுணக்கம் நீங்கி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி. ஆகியவற்றின் தாக்கத்தில் இருந்தும் இந்திய பொருளாதாரம் மீண்டுவிட்டதாக அந்த அறிக்கையில் உலக வங்கி தெரிவித்துள்ளது.

 இதனால் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 புள்ளி 3 சதவீதமாகவும், அடுத்த நிதியாண்டில் 7 புள்ளி 5 சதவீதமாகவும் இருக்கும் என கூறியுள்ள உலகவங்கி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியால், ஆசியாவின் வளர்ச்சியும் நடப்பாண்டில் 6 புள்ளி 9 சதவீதமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.