மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து வரும் ஜூன் 17-ம் தேதி அன்று நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவர்களுக்கு போராட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் இந்த போராட்டத்தால் நோயாளிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

கடந்த 5 நாட்கள் முன்பு, கொல்கத்தாவில் உள்ள நில்ரதன் சர்கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஒன்றில், நோயாளியின் உறவினர் ஒருவர் இளநிலை மருத்துவர் ஒருவரை தாக்கினார். இதில் தலையில் அடிப்பட்டு படுகாயமடைந்த அந்த மருத்துவர் சிகிச்சைபெற்று வருகிறார். இதனை கண்டித்து 5-வது நாளாக மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் மருத்துவர்கள் 4 மணிநேரத்திற்குள் போராட்டத்தை கைவிட்டு, பணியில் திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரித்தும் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இதனிடையே மருத்துவர்கள் இந்த போராட்டம் பல்வேறு இடங்களிலும் காட்டுத் தீ போல பரவியது. 

இதனிடையே மருத்துவர்களுக்கு பணியிடங்களில் பாதுகாப்பு உறுதி செய்ய வலியுறுத்தி இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், ஜூனியர், சீனியர் மருத்துவர்கள் என்று அனைத்து தரப்பினரும் வரும் ஜூன் 17-ம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக இந்திய மருத்துவர் சங்கம் அறிவித்துள்ளது. இந்தப் போராட்டத்தினால் நாடு முழுவதும் உள்ள அறுவை சிகிச்சை மற்றும் அவசர சிகிச்சை நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.