பாலியல் பலாத்கார வழக்கில் சி.பி.ஐ. நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரும், சாமியாருமான குர்மீத்ராம் ரஹீம் சிங்குக்கு அரியானாவில் ஆளும்  பா.ஜனதா அரசிடம் இருந்து ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது வௌிச்சத்துக்கு வந்துள்ளது.

கடந்த 2002ம் ஆண்டு பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தேராசச்சா சவுதா அமைப்பின் தலைவரும், சாமியாருமான குர்மீத் ராம் ரஹீம் சிங்கை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பளித்தது.

சாமியார் குர்மீத் சிங்குக்கும், அரியானா அரசுக்கும் கடந்த சில ஆண்டுகளாகவே நல்ல உறவுநிலை இருந்துள்ளது இப்போது தெரியவந்துள்ளது. இதனால், குர்மீத் சிங்கின் தேரா சச்சா சவுதா அமைப்புக்கு முதல்வர் மனோகர் லால் கட்டார் அரசு ஏராளமான சிறப்பு சலுகைகளை அளித்துள்ளது.

சமீபத்தில் குர்மீத் சிங் நடித்த ‘ஜட்டூ எஞ்சினியர்’ என்ற திரைப்படத்துக்கு முதல்வர்கட்டார் தலைமையிலான அரசு 6 மாதம் வரிவிலக்கு அளித்தது.

மேலும், கடந்த மே மாதம் குர்மீத் சிங், தனது அமைப்பு சார்பில் கர்நால் நகரில் மிகப்பெரிய விழா ஒன்றை நடத்தினார். அதற்கும் மாநில அரசு வரிவிலக்கு அளித்தது.

சாமியார் குர்மீத்துடன் நல்ல நட்புறவு கொண்டதால், முதல்வர் மனோகர் லால்கட்டார், அவருடன் இணைந்து, தூய்மை இந்தியா திட்டத்தில்  இருவரும் தூய்மை பணியில் ஈடுபட்டு விளம்பரம் செய்தனர். 

முதல்வர் கட்டாருக்கும், சாமியார் குர்மீத் சிங்குக்கும் இருக்கும் நட்புறவைப் பார்த்து அவரின் அமைச்சரவை சகாக்களும் கூடுதல் நெருக்கம் காட்டினர்.

தேரா சச்சா சவுதா அமைப்பின் சார்பில் சமீபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த விளையாட்டு விழாவுக்காக மாநில விளையாட்டு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ரூ.50 லட்சம் நன்கொடை வழங்கினார்.

மேலும் தேரா சச்சா சவுதா ஆசிரமம அமைந்துள்ள சிர்சா நகரில் கடந்த காலங்களில் நடந்த விளையாட்டுப் போட்டிகள் அனைத்துக்கும் மாநிலத்தில் ஆளும்  பா.ஜனதா அரசு ஏராளமான சலுகைகளையும், ஊக்கமளிப்பு திட்டங்களையும் அளித்துள்ளது.

ஆசிரமத்துக்கு சொந்தமான மைதானத்தில் அனைத்து போட்டிகளும் நடப்பதாலும், கிராமப்புற மாணவர்கள் பங்களிப்பை ஊக்கப்படுத்தவும் நிதி உதவி அளிக்கப்பட்டதாக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதற்கிடையே மற்றொரு அமைச்சர் மணிஷ் குரோவர், தேரா விளையாட்டுஅகாடெமிக்கு ரூ.11 லட்சம் நன்கொடை அளித்தார். இதனால், தேரா சச்சா  சவுதாஅமைப்புக்கும், மாநிலத்தில் ஆளும்ப பா.ஜனதா அரசுக்கும் இடையே நெருக்கம் கடந்த காலத்தில் இருந்தே தொடர்ந்து வந்தது. 

இது மட்டுமல்லாமல், கடந்த 2014ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சாமியார்குர்மீத் சிங், பா.ஜனதா கட்சிக்கு தனது ஆதரவை அளித்து, தேர்தலில் வெற்றி பெற முக்கியக் காரணமாக அமைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.