டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில் அடுத்தடுத்து பகீர் தகவல்கள் வெளியாகி வருகின்றன.  தற்போது  புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில் ஸ்டூல்கள் மற்றும் ஒயர்களை எடுத்துச் செல்வது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது. டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் அவர்களது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இதில் 10 பேர் தூக்கில் தொங்கிய நிலையிலும், மற்றொருவர்  தரையில் சடலமாகவும் கிடந்தார். அனைவரும் கண்கள் மற்றும் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்தனர். இதனால் இவர்கள் கொலை செய்யப்பட்டனரா அல்லது தற்கொலை செய்துகொண்டனாரா என தெரியாமால் போலீஸார் விழிபிதுங்கினர். ஆனால் இவர்களது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து உயிரிழந்தவர்களின் வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது திடீர் திருப்பமாக அவர்கள்  வீட்டிற்குள்ளேயே கோவிலை கட்டி  வழிபாடு நடத்தியது தெரியவந்தது. வழிபாட்டு முறையும் வித்தியாசமாக இருந்ததை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். எனவே மூட நம்பிக்கை காரணமாக இந்த கொலை அரங்கேறி இருக்கலாம் எனவும் போலீஸார் சந்தேகிக்கின்றனர். போலீஸார் கைப்பற்றிய டைரியில் சொர்க்கத்தை அடைய தற்கொலைதான் வழி என்று எழுதப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 11 பேர் உயிரிழந்த நிலையில், 11 டைரிகள் கைப்பற்றப்பட்டதாகவும், அவை 11 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்திருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் வீட்டின் சுவரில் மொத்தம் 11 குழாய்கள் வெளியே வந்து இணைப்பு இல்லாமல் நீட்டிக்கொண்டிருந்துள்ளன. ஆனால் அவைகள் தண்ணீர் வருவதற்கான குழாய்கள் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. ‘இந்த மரணத்தில் பல்வேறு மர்ம தடயங்கள் கிடைத்து வருவதால் போலீஸாருக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக புதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அதில் ஸ்டூல்கள், ஒயர்களை எடுத்துச் செல்வது பதிவாகியுள்ளது. தற்கொலைக்கு அவற்றைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.