பன்னிரெண்டு வயதுடைய குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்வோருக்கு மரண தண்டனை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலித்து வருவதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மேனகா காந்தி கூறியுள்ளார்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், கத்துவா என்ற கிராமத்தை சேர்ந்த 8 வயது பள்ளி படிக்கும் ஆசிஃபா சிறுமி 7 பேரால் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை மற்றும் வன்புணர்வு வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மேலும்
இந்த கொலை சம்பவமும், அந்த சிறுமி வன்புணர்வு பற்றி தற்போது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 18 பக்கம் கொண்ட இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் இந்த கோர சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான முன்னாள் அரசு அதிகாரி சாஞ்சி ராம் பெயர் இடம்பெற்றுள்ளது.அதேபோல வழக்கில் இரண்டு சிறுவர்கள் குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கிறார்கள்.

ஆசிஃபா தினமும் காட்டுப்பகுதியில் குதிரை மேய்ப்பதை பலமுறை சாஞ்சி ராமும் அவரது மகன் விஷால், அவனின் நண்பன் பர்வேஷ் ஆகியோர் நோட்டமிட்டுக் கொண்டிருந்துள்ளனர். அப்போது கடந்த ஜனவரி 10 ஆம் தேதி அந்த சிறுமியை பின்தொடர்ந்து கடத்தி இருக்கிறார்கள். முதலில் குஜ்ஜார் இன மக்களை
பயமுறுத்த இப்படி செய்துள்ளனர். கடைசியில் அந்த சிறுவர்களின் விருப்பப்படி பலாத்காரம் செய்துள்ளனர். பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி ஆசிஃபா கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கோர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், குழந்தைகள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாவது குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் முக்கிய உறுப்பினர்கள் ஒன்று கூடி சட்ட திருத்தம் உருவாக்கப்பட்டு வருகிறது. அது முடிவு பெற்றதும் சட்டத்துறைக்கு அனுப்பப்படும். தற்போது நாடாளுமன்றம் செயல்படாததால் அவசர
சட்டம் இயற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள போஸ்கோ சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி 12 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளை பாலியல் வன்புணர்வுகளுக்கு உட்படுத்துபவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் வகையில் திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் இச்சட்டத்திருத்தம் விரைவில் அமலுக்கு வரும் என்றும்
எதிர்பார்க்கப்படுகிறது.