பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறையை மே மாதம் 15ம் தேதி வரை நீட்டிக்குமாறும், மத நிகழ்ச்சிகளுக்கான கட்டுப்பாடுகளை ஒரு மாதம் தொடரவும் மத்திய அமைச்சரவைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்த போதிலும் கொரோனா தொற்று நாளுக்குநாள் வேகம் எடுத்து வருகிறது. இதுவரை இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,194-ஐ தாண்டியுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 149ஆக உயர்ந்துள்ளது. இதை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றனர். இதனிடையே, ஊரடங்கு முடிய இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற ஐயம் அனைவரும் மத்தியிலும் இருந்து வருகிறது. 

இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாம் என பல மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன. பல்வேறு நிபுணர்களும் ஊரடங்கை நீட்டிக்க கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், தேசிய ஊரடங்கு விவகாரம் தொடா்பாக டெல்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையில் மத்திய அமைச்சா்கள் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், ஊரடங்கு நீட்டிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஆனால், 21 நாட்கள் ஊரடங்கு அகற்றப்படுவத் குறித்து அல்லது நீட்டிக்கப்படுவது குறித்தும் எந்த இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் பொது போக்குவரத்து, பள்ளி கல்லூரிகள் செயல்பட தடைவிதிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுக்க மே 15ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளை திறக்க வேண்டாம் என்றும், அது வரை தேர்வுகள் எதையும் நடத்த வேண்டாம் என்றும் அமைச்சரவை குழு பரிந்துரை செய்துள்ளது. இதன் அடிப்படையில் விரைவில் உத்தரவு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.