கோசாலையில் பட்டினியால் இறந்த பசுமாடுகள் மீனுக்கு இரை…நிதி முறைகேடு செய்த பா.ஜனதா பிரமுகர் கைது...

சட்டீஸ்கர் மாநிலத்தில், கோசாலையில் பட்டினியில் இறந்த பசு மாடுகளை வெட்டி மீனுக்கு இரையாக போட்ட பா.ஜனதா பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

கோசாலையை பராமரிக்க ஒதுக்கிய நிதியை முறையாக மாடுகளுக்கு செலவு செய்யாமல் முறைகேட்டில் ஈடுபட்டதும், மாடுகளை கடத்தியதும்  தெரியவந்ததால் அவர் கைது செய்யப்பட்டார். 

சட்டீஸ்கர் மாநில அரசு சார்பில் கோசாலைகள் பசு சேவை மையம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் துருக் மாவட்டத்தில் உள்ள ராய்பூர்கோசாலை மையத்தை பா.ஜனதா கட்சியின் பிரமுகர் ஹரிஸ் வர்மா நடத்தி வருகிறார்.

இவர் நடத்தி வந்த கோசாலை மற்றும் மற்ற கோசாலைகளில் கடந்த வாரத்தில் 173 மாடுகள் மர்மமான முறையில் இறப்பதாக பசு சேவை மையத்துக்கு புகார்கள் வந்தன. ஆனால், இது குறித்து உள்ளூர் அதிகாரிகள் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து, பசு சேவை மையம் இது குறித்து விசாரணை நடத்தியதில் அந்த புகார்கள் உண்மை என்பது தெரியவந்தது. மேலும், இறந்த மாடுகளையும் உடற்கூறு ஆய்வு செய்ததில், மாடுகள் பசியாலும், தாகத்தாலும்தான் இறந்தது தெரியவந்தது.

இந்த அறிக்கை குறித்த அறிந்த முதல்வர் ராமன்சிங், கோசாலையில் மாடுகள் இறந்தது தொடர்பாக புதிதாக விசாரணை நடத்த கால்நடை துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டார். மேலும், கோசாலையில் அதிகாரிகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டார்.

அந்த அறிக்கையில், பசுக்கள் கோசாலையில் உணவின்றியும், குடிக்க நீரின்றி இறந்துள்ளது, பராமரிக்க வழங்கப்பட்ட பணத்தை அதிகாரிகளுடன்  சேர்ந்து  பா.ஜனதா பிரமுகர் ஹரிஸ் வர்மா முறைகேட்டில் ஈடுபட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் 9 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்து அரசு நடவடிக்கை எடுத்தது. இதில் 7 பேர் கால்நடை மருத்துவர்கள், 2 பேர் துணை இயக்குனர் பதவியில் இருப்பவர்கள். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜனதா பிரமுகர் ஹரிஸ் வர்மா கடந்த வௌ்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

சனிக்கிழமை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும் போது, காங்கிரஸ் தொண்டர்கள் ஹரிஸ்வர்மா முகத்தில் கரியைப்பூசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவரை தாக்குதலில் இருந்து மீட்டு கொண்டு சென்றனர்.

இதில் கோசாலையை பராமரிக்க அரசு சார்பில் ரூ.93 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த பணத்தை முறைகேடு செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல், இந்த கோசாலை தவிர்த்து பெஹ்மேத்ரா மாவட்டத்திலும் தனியாக இரு கோசாலைகளைஹரிஸ்வர்மா நடத்தியது விசாரணையில் தெரியவந்தது. அங்கு சென்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் இறந்த பசுமாடுகளை கழிவுநீர்  ஓடைகளுக்குள்ளும், குழிதோண்டியும் புதைத்துள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.