இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதுவரை 1,637 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 38 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

உலகம் முழுதும் கொரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 லட்சத்தை நெருங்குகிறது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 42,151ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சமூக தொற்று பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால், கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து கொண்டே வருகிறது.

இன்றைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,637 பேராக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. 132 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா தற்போது முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 320 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் 241 பேருக்கும், தலைநகர் டெல்லியில் 120 பேருக்கும், குஜராத்தில் 59 பேருக்கும், ஜம்மு காஷ்மீரில் 48 பேருக்கும், கர்நாடகாவில் 83 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. தமிழகத்தில் 124 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.