மத்திய அரசின் கொள்கைகளை கண்டித்து வரும் 20ம் தேதி உண்ணாவிரதம் இருக்க போவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததால், மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவுடனான கூட்டணியை ஆந்திர ஆளுங்கட்சியான தெலுங்கு தேசம் முறித்துக்கொண்டது. அதன்பிறகு மத்திய அரசுக்கு எதிராகவும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் ஆந்திர முதல்வரும் தெலுங்குதேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் இனவோலு கிராமத்தில் நடந்த அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் பேசிய சந்திரபாபு நாயுடு, வரும் 20ஆம் தேதி எனது பிறந்த தினமாகும். அன்றைய நாளில், மாநில பிரச்னைகளுக்காகவும், மத்திய அரசின் கொள்கையை கண்டித்தும் நான் காலை முதல் மாலை வரை ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளேன். எனது எதிர்ப்பை மத்திய அரசுக்கு உண்ணாவிரதப் போராட்டத்தின்மூலம் தெரிவிக்க இருக்கிறேன்.

மத்தியில் அடுத்து எந்தக் கட்சி ஆட்சியமைக்க வேண்டும் என்பதையும், யார் பிரதமராக பதவியேற்க வேண்டும் என்பதையும் தீர்மானிக்கும் கிங் மேக்கர் கட்சியாக தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் உருவெடுக்கும். மாநிலங்களின் நலன்களைக் காக்க வேண்டும் என்ற ஓரே குறிக்கோளுடன்தான் பாஜகவுடன் தெலுங்கு தேசம் கட்சி கரம் கோர்த்தது. ஆனால், அக்கட்சியோ தெலுங்கு தேசம் கட்சிக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டது. மாநிலத்தின் நலனுக்காக எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் மத்திய அரசை நான் தொடர்ந்து எதிர்ப்பேன். மத்திய அரசிடம் இருந்து மாநிலத்துக்கு என்ன கிடைக்க வேண்டுமோ, அதை பெற்றுத் தருவேன் என சந்திரபாபு நாயுடு பேசினார்.