ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் சிபிஐ சீலிடப்பட்ட கவர் ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், ராஜீவ் கொலையில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு தொடர்பான முக்கிய தகவல்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி, ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் இருப்பவர் பேரறிவாளன். இவர் அண்மையில் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுக்கு பேட்டரி வாங்கி கொடுத்ததற்காகத்தான், தான் கைது செய்யப்பட்டு, தண்டனை அனுபவித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆனால், அந்த வெடிகுண்டு என்ன வகையானது என்பது பற்றி ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்தே தெளிவான பதில்களோ, தகவல்களோ இல்லை என்றும் மனுவியில் கூறியிருந்தார்.

பேரறிவாளனின் மனு, கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது ராஜீவ் கொலையில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு சிபிஐக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்துக்கு வந்தது. விசாரணையின்போது, சிபிஐ, உச்சநீதிமன்றத்தில் சீலிடப்பட்ட கவர் ஒன்றை தாக்கல் செய்தது.

அதில் ராஜீவ் கொலையில், பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு தொடர்பான முக்கிய தகவல்கள் இருக்கலாம் என்று தெரிகிறது.