தொடர்ந்து 3 மாதங்கள் ரேஷன் பொருட்கள் வாங்காவிட்டால் பயனாளிகளின் குடும்ப அட்டை ரத்து செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.  ரேஷன் பொருட்களை 3 மாதங்கள் தொடர்ச்சியாக வாங்காமல் இருக்கும்  பயனாளிகளின் குடும்ப அட்டையை ரத்து செய்ய மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நேற்று மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தலைமையில் டெல்லியில் மாநில உணவுத்துறை அமைச்சர்களின் மாநாடு நேற்று நடைபெற்றது. 

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பஸ்வான் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் சலுகைகள் அனைத்து பயனாளிகளுக்கும் சென்று சேர்வதை அதிகாரிகள் உறுதிபடுத்த வேண்டும். பொருட்கள் உரிய பயனாளிகளுக்கு சென்று சேர்கிறதா? என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். என்றார்.

 3 மாதங்களுக்கு மேல் ரேஷன் பொருள்களை வாங்காத குடும்ப அட்டைதாரர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதன் மூலம், மானிய விலையில் வழங்கப்படும் உணவுப் பொருள்களை வாங்க வேண்டிய அவசியமில்லாதவர்களைக் கண்டறிந்து அவர்களது குடும்ப அட்டைகளை ரத்து செய்ய முடியும் என்றும் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பட்டினிச் சாவு , ஏழைகளுக்கு உணவில்லா நிலையை தடுக்க முடியும் என்றார்.   ரேஷன் கடைகளுக்கு வர இயலாதவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று மானிய விலையில் உணவு தானியங்களை விநியோகிக்க வேண்டும் என  பஸ்வான் தெரிவித்துள்ளார்.