பசு மாட்டின் கோமியம் பல விதமான புற்றுநோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது என ஆய்வில் தெரியவந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.  பசு மாட்டுச் சாணம், கோமியம் ஆகியவை இந்தியாவில் பாரம்பரியமாக பல்வேறு விசயங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், நவீன மயமாக்கலின் காரணமாக அவை வழக்கொழிந்துவிட்டன. ரசாயன விவசாயத்தால் தொடர்ந்து இழப்பை சந்தித்து, இயற்கை விவசாயத்துக்கு திரும்பியவர்கள் தற்போது, பசுமாட்டின் சாணம் மற்றும் கோமியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையில், மத்தியில் ஆளும் பாஜகவைச் சேர்ந்த அமைச்சர்களும், தலைவர்களும், பசுமாட்டின் கோமியம் குறித்து நாளுக்கு நாள் ஒரு கருத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், குஜராத் மாநிலம் ஜுனாகத் வேளாண் பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பவியல் ஆய்வாளர்களும் கோமியத்தை ஆய்வு செய்து புதிய கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது, பசுமாட்டின் கோமியம் மனிதர்களின் உடலில் இருக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும் திறனுடையது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். 

புற்றுநோய் செல்களை ஒரு பாட்டிலில் அடைத்து, அதில் கோமியத்தை மாறுபட்ட அளவில் செலுத்தி சோதனை செய்தோம், சோதனையை தொடங்கி ஒரு ஆண்டு கழிந்துவிட்ட நிலையில், புற்றுநோய் செல்களை அழிக்கும் கோமியத்தின் அளவை தெரிந்து கொண்டோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். உண்மையில் இந்த ஆய்வு மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் தொடர்ந்து மேற்கொண்டதால் பயன் கிடைத்துள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  இந்த சோதனையின் மூலம் வாய், கருப்பை, நுரையீரல், சிறுநீரகம் மற்றும் தோல் ஆகிய உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய்களை கோமியம் குணப்படுத்தும் என்று தெரிந்து கொண்டதாகவும், விரைவில் எலியை வைத்து சோதனை செய்ய இருப்பதாகவும் கூறியுள்ள ஆய்வாளர்கள், இந்த முயற்சி வெற்றிபெற்றால், கோமியத்தை கொண்டு மாத்திரை தயாரித்து சந்தைப்படுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.