மத்திய அரசின் புதிய மோட்டார் வாகனச் சட்டம் கடந்த 1-ம் தேதி முதல் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி, போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கான அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் நூறு ரூபாய் முதல் பல லட்சம் வரை அபராதம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் வாகன கண்காணிப்பில்  ஈடுபட்டுவரும் போக்குவரத்து போலீசார் வாடகை டாக்சிகளில் உள்ள முதலுதவி பெட்டிகளையும் சோதனை செய்கின்றனர். டாக்சி ஏதேனும் விபத்தை சந்தித்தால் அதில் உள்ளவர்களுக்கு முதலுதவி அளிக்க தேவையான மருந்து பொருட்கள் அந்த பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், போக்குவரத்து போலீசார் முதலுதவி பெட்டிகளை சோதனை செய்யும் போது அதில் ஆணுறை இல்லை என தெரியவந்தால் அந்த டாக்சிக்கு அபராதம் விதிக்கின்றனர்.  விதிக்கப்பட்ட அபராதத்திற்கான ரசீதை டாக்சி ஓட்டுநர்களிடம் வழங்குகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து டெல்லி போலீஸ் சிறப்பு ஆணையர் தாஜ் ஹசன் கூறுகையில்,'மோட்டார் வாகனச்சட்டத்தில் முதலுதவி பெட்டியில் ஆணுறை இருக்கவேண்டும் என எந்த விதியும் இல்லை. நாங்கள் எந்த ஓட்டுநருக்கும் இது தொடர்பாக அபராத ரசீது வழங்கவில்லை’என தெரிவித்தார்.