நாடாளுமன்ற தேர்தலில் மராட்டியத்தில் பா.ஜ.க – சிவசேனா கூட்டணி தொடர்வது சந்தேகம் என்பது நிரூபணமாகியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடியை பிரதமராக்கியே தீருவோம் என்று சூளுரைத்து களம் இறங்கினார் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே. பா.ஜ.கவும் சிவசேனா கேட்ட தொகுதிகளை அள்ளிக் கொடுத்து பலமான கூட்டணி அமைத்தது. 24 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க 23 தொகுதிகளில் வெற்றியை குவித்தது. சிவசேனாவோ 20 தொகுதிகளில் போட்டியிட்டு 18 தொகுதிகளை கைப்பற்றியது. 

ஆனால் தேர்தல் முடிந்த உடனேயே சிவசேனா – பா.ஜ.க கூட்டணியில் பிரச்சனை ஏற்பட்டது. கூட்டணி அமைச்சரவையில் சிவசேனா எதிர்பார்த்த இலாக்காக்களை பா.ஜ.க தரவில்லை. இதனை தொடர்ந்து சிவசேனாவின் எம்.பியான சுரேஷ் பிரபுவை பா.ஜ.க தன் வசம் இழுத்துக் கொண்டது. அவருக்கு ரயில்வே துறையை மோடி வழங்க அதுநாள் வரை அமைதி காத்த உத்தவ் தாக்கரே பா.ஜ.கவை விமர்சிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சிவசேனா – பா.ஜ.க தனித்தனியாக களம் இறங்கின. ஆனால் தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க – சிவசேனா கூட்டணி அமைத்து தற்போது ஆட்சி செய்து வருகின்றன. இந்த நிலையில் தான் நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி வியூகத்தை அமித் ஷா வகுத்து வருகிறார். 

கடந்த 10 நாட்களுக்கு முன்னர் மும்பை சென்று உத்தவ் தாக்கரேவை சந்தித்து கூட்டணி குறித்து பேசியுள்ளார் அமித் ஷா. ஆனால் சாதகமான எந்த பதிலையும் உத்தவ் தாக்கரே தரவில்லை. மேலும் அண்மையில் நடந்து முடிந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் வாக்கெடுப்பின் போது சிவசேனா பா.ஜ.கவிற்கு ஆதரவாக நிற்கவில்லை. மேலும் ஆதரவு கேட்டு தொலைபேசியில் உத்தவ் தாக்கரேவை தொடர்பு கொள்ள பல முறை அமித் ஷா முயன்றுள்ளார். ஆனால் உத்தவ் தாக்கரே அமித் ஷாவுன் பேசவே முடியாது என்று கூறிவிட்டார். 

இந்த நிலையில் தான் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட மராட்டிய பா.ஜ.க தொண்டர்கள் தயாராக இருக்குமாறு அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். இதனையே எதிர்பார்த்து காத்திருந்தது போல் சிவசேனாவும், மோடியின் கனவை நினைவாக்க நாங்கள் கட்சி நடத்தவில்லை என்று அதிரடியாக அறிவித்துள்ளது.நிலைமை மோசமாகி வருவதால் நாடாளுமன்ற தேர்தலுடன் மராட்டியத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். ஏனென்றால் தற்போது மராட்டியத்தின் பட்னாவிஸ் அரசு சிவசேனா ஆதரவுடன் தான் ஆட்சியில் உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் மராட்டிய மாநில பா.ஜ.க அரசை சிவசேனா கவிழ்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.