டெல்லி தேர்தலில் புகுந்து விளையாடும் 'இலவசம்'; திராவிட கட்சிகளை மிஞ்சிய பாஜக, ஆம் ஆத்மி!
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இலவச கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. தமிழ்நாட்டின் திராவிட கட்சிகளை மிஞ்சிய இந்த வாக்குறுதிகள் குறித்து விரிவாக காணலாம்.
டெல்லி சட்டப்பேரவை தேர்தல்
இந்தியாவின் தலைநகரான டெல்லி சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாடாளுமன்றம், பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் என இந்தியாவின் அதிகார மையமாக வலம் வரும் டெல்லியை கடந்த 10 ஆண்டுகளாக அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி கட்சி தான் ஆட்சி செய்து வருகிறது.
இந்த முறையும் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்கும் முனைப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் தீவிரமாக உள்ளார். பல்வேறு மாநிலங்களில் மோடி அமித்ஷா கூட்டணி வெற்றிக் கொடியை ஏற்றிய நிலையில், டெல்லி மட்டும் 2 தேர்தல்களாக எட்டாக்கனியாக உள்ளது. இந்த முறை டெல்லி தேர்தல் வெற்றி என்ற கனியை பறித்து விட வேண்டும் என பாஜக முழு முயற்சியுடன் களமிறங்கியுள்ளது.
இலவச வாக்குறுதிகள்
மறுபக்கம் சந்தித்த தேர்தல்களில் எல்லாம் சறுக்கி வரும் காங்கிரஸ் தலைநகரிலாவது தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டும் எனற துடிப்புடன் உள்ளது. மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணியில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி தேர்தலில் காங்கிரசை நைசாக கழட்டி விட்டார். இதனல் காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. நரேந்திர மோடி ராகுல் காந்தி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் என தலைநகரின் அதிகாரத்தை கைப்பற்ற மும்முனை போட்டிகள் நிலவி வருகிறது.
பிரசாரத்தில் பிரதமர் மோடி, அரவிந்த் கெஜ்ரிவால் ஒருவரை ஒருவர் மாறி, மாறி குற்றம்சாட்டி வருவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இது ஒருபுறமிருக்க, இப்போதெல்லாம் தேர்தலில் வெற்றி பெற திட்டங்களை விட இலவசங்கள் தான் பிரதானமாக உள்ளது. டெல்லி சட்டப்பேரவை தேர்தலிலும் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் போட்டி போட்டு இலவசங்களை அறிவித்துள்ளன.
பொதுவாக தமிழ்நாட்டில் தேர்தல்களின்போது திமுக, அதிமுக திராவிட கட்சிகள் இலவச வாக்குறுதிகளை அள்ளித்தெளிக்கும். டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகியவை திராவிட கட்சிகளை மிஞ்சி விட்டன. இது குறித்து விரிவாக காண்போம்.
ஆம் ஆத்மி வாக்குறுதிகள் மற்றும் இலவசங்கள்
* 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம்தோறும் மகிளா சம்மன் யோஜனா உதவித் தொகையின் கீழ் ரூ.1,000 வழங்கப்படும் நிலையில், இது ரூ.2,100 உயர்த்தி வழங்கப்படும்.
* தலித் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் வெளிநாடுகளில் உயர்கல்வி பயில்வதற்கான முழு செலவையும் (கல்வி கட்டணம், பயணம், தங்குமிடம் மற்றும் படிப்பு தொடர்பான செலவுகள்) அரசே பார்த்துக் கொள்ளும்.
* அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மூத்த குடிமக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும்.
* ஆட்டோ ஓட்டுநரின் மகளின் திருமணத்திற்கு ₹1 லட்சம் வழங்கப்படும்.
ஆட்டோ ஓட்டுநரின் புதிய சீருடைகளுக்கு வருடத்திற்கு இரண்டு முறை (ஹோலி மற்றும் தீபாவளிக்கு) ரூ.2,500 அளிக்கப்படும்.
பூசாரிகளுக்கு ரூ.18,000
* ஒவ்வொரு ஆட்டோ ஓட்டுநருக்கும் ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு மற்றும் ரூ.5 லட்சம் விபத்து காப்பீடு செய்யப்படும்.
* போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் ஆட்டோ ஓட்டுநர்களின் குழந்தைகளுக்கு அரசு பயிற்சி கட்டணம் வழங்கும்.
* கோயில் பூசாரிகளுக்கு ரூ.18,000 உதவித்தொகை வழங்கப்படும்.
* பெண்கள் மற்றும் மாணவர்ககளுக்கு பேருந்தில் இலவச பயணம்
* டெல்லி மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணத்தில் மாணவர்களுக்கு 50% சலுகை அளிக்கப்படும்.
* டெல்லி மகக்ளுக்கு 200 யூனிட் வரை மின்சாரம் வரை 50% தள்ளுபடி அளிக்கப்படும்.
பாஜக வாக்குறுதிகள் மற்றும் இலவசங்கள்
* வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள பெண்களுக்கு ரூ.2,500 வழங்கப்படும். கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.21,000 வழங்கப்படும்.
* யுபிஎஸ்சி, சிவில் சர்வீசஸ் மற்றும் மாநில போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இரண்டு முயற்சிகள் வரை ரூ.15,000 உதவித்தொகை வழங்கப்படும்.
* ஐடிஐக்கள் மற்றும் பாலிடெக்னிக் திறன் மையங்களில் தொழில்நுட்பப் படிப்புகளைத் தொடரும் எஸ்சி பிரிவு மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும்.
* 60 முதல் 70 வயது வரை உள்ளவர்களுக்கு ரூ.2,500 ஓய்வூதியம் வழங்கப்படும்.
* ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகையின் போது எல்பிஜி சிலிண்டர்களுக்கு ரூ.500 மானியமும், தலா ஒரு இலவச சிலிண்டரும் வழங்கப்படும்.
* குடிசைப் பகுதிகளில் உள்ள அடல் கேன்டீன்களில் ரூ.5 விலையில் உணவு வழங்க்கப்படும்.
*ஆட்டோ-டாக்ஸி ஓட்டுநர்களுக்கு ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு மற்றும் ரூ.5 லட்சம் விபத்து காப்பீடு செய்யப்படும்.
இலவச பேருந்து பயணம்
* ஆட்டோ-டாக்ஸி ஓட்டுநர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
* இலவச மின்சாரம், இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட டெல்லி அரசின் அனைத்து நலத்திட்டங்களும் தொடரும்.
* மூத்த குடிமக்களுக்கு ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சை அளிக்கப்படும்.
* 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து நபர்களுக்கும் ரூ.10 லட்சம் சுகாதார காப்பீடு மற்றும் இலவச நோய் பரிசோதனை
* மத்திய அரசால் ரூ.5 லட்சம் வரை சுகாதார காப்பீடும், டெல்லி அரசால் ரூ.5 லட்சம் வரை கூடுதல் காப்பீடும் செய்யப்படும்.
* அரசு நிறுவனங்களில் மழலையர் பள்ளி முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை தேவைப்படும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும்.
காங்கிரஸ் வாக்குறுதிகள் மற்றும் இலவசங்கள்
* பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும்.
* போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ரூ.8,500 உதவித்தொகை வழங்கி பயிற்சியும் அளிக்கப்படும்.
* கேஸ் சிலிண்டருக்கு ரூ.500 மானியம் வழங்கப்படும்.
* 5 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை, 1 லிட்டர் எண்ணெய், 6 கிலோ பருப்பு, 250 கிராம் தேயிலை அடங்கிய ரேஷன் தொகுப்பு பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.
* 300 யூனிட் வரை மின்சாரம் இலவசம்.
* டெல்லியில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் மருத்துவமனைகளில் ரூ.25 லட்சம் வரை இலவச சிகிச்சை மேற்கொள்ளப்படும்.