ஆசிஃபா பாலியல் வன்கொடுமைக்கு ஆதரவாக முகநூலில் பதிவிட்ட வங்கி ஊழியரை வங்கி நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது. 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி ஆசிஃபா பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அரசு அதிகாரி, காவல்துறை அதிகாரிகள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கோர சம்பவம் தேசிய அளவில் கடும் அதிர்வலைகளையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆசிஃபாவிற்கு நீதி கிடைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திவருகின்றனர்.

இந்நிலையில், ஆசிஃபா கொலை செய்யப்பட்டது நல்லதுதான் என பதிவிட்ட நபர், வங்கி பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் கோடக் மகேந்திர வங்கியின் உதவி மேலாளராக இருந்த விஷ்ணு நந்தகுமார் என்ற அந்த இளைஞர் தனது முகநூல் பக்கத்தில், ”ஆசிஃபா இந்த வயதிலேயே கொலை செய்யப்பட்டது நல்லது. இல்லையென்றால் வளர்ந்தபிறகு இந்தியாவிற்கு எதிராக குண்டுவீசுபவளாக மாறியிருப்பாள்” என சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவு பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. 

சிறுமியை வன்கொடுமை செய்து கொன்றதற்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட விஷ்ணுவிற்கு எதிர்ப்புகளும் கண்டன குரல்களும் வலுத்தன. எத்தனையோ நல்லவர்கள் இருக்கிறார்கள்; அவர்களுக்கு வேலை கொடுங்கள். இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆதரிப்பவர்களையா வேலையில் வைத்திருக்கிறீர்கள்? இவரை உடனடியாக பணியிலிருந்து நீக்கி உங்கள் நிறுவனத்தின் பெயரை காப்பாற்றுங்கள் என்று குரல்கள் வலுத்தன.

இதையடுத்து விஷ்ணு நந்தகுமார் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 8 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமைக்கு எதிராக தேசமே ஒன்றிணைந்து நீதி கேட்டுவரும் நிலையில், இளைஞர் ஒருவர் இப்படியொரு கருத்தை பதிவிட்டிருப்பது, பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.