மை பற்றாக்குறை காரணமாக புதிய ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் பணத்தட்டுப்பாடு நிலவுவதாக நாசிக் அச்சக ஊழியர்கள் கூட்டடைப்பு தெரிவித்துள்ளது.

2,000 ரூபாய் நோட்டுகளை தவிர மீதமுள்ள அனைத்து நோட்டுகளும்  மகாராஷ்ட்டிரா மாநிலம் நாசிக்கில்  அச்சிடப்படுகின்றன. இங்கு தற்போது ரூ.200 மற்றும் ரூ.500 நோட்டுகள் அச்சிடுவதற்கான ‘மை’க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இந்த நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தப்பட்டு இருப்பதாக அச்சக ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

ரூபாய் நோட்டுகள்  அச்சிடுவதற்கான மை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அந்த மைக்கு தற்போது நாசிக்கில்  தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால்  ரூ.200, ரூ.500 நோட்டுகள் அச்சடிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக அச்சக ஊழியர் சங்கத் தலைவர்  ஜக்திஷ் கோட்சே கூறினார்.

இதுதான் தற்போதைய பணத்தட்டுப்பாட்டுக்கு காரணம் என்றும் அவர் கூறினார். ஆனால் எப்போது முதல் ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு நிறுத்தப்பட்டது என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் பல மாநிலங்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் 500 ரூபாய் நோட்டுகள் 5 மடங்கு அச்சிடுவதற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என மத்திய அரசு கூறியிருக்கும் நிலையில், நாசிக் அச்சக ஊழியர் இவ்வாறு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.