முன்னாள் மத்திய அமைச்சர்  எம்.ஜே. அக்பர் பத்திரிகையாளராக பணிபுரிந்து அரசியலில் நுழைந்தவர்.  அவர் பத்திரிகையாளராக பணியாற்றிய காலங்களில் அவருடன் பணிபுரிந்த பெண்களில் 16க்கும் மேற்பட்ட பெண்கள் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர்.

இதனை தொடக்கத்தில் அக்பர் மறுத்து வந்த நிலையில் அவருக்கு எதிராக போராட்டங்கள் வலுவடைந்தன.  அவர் பதவி விலக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

அதன்பின்னர் அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.  இந்த நிலையில், நேசனல் பப்ளிக் ரேடியோ என்ற அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை சேர்ந்த ஊடக அமைப்பின் தலைமை வர்த்தக ஆசிரியையாக பணியாற்றும் பல்லவி கோகய் என்பவர், முன்னாள் மத்திய அமைச்சர்  எம்.ஜே. அக்பர் தன்னை கற்பழித்து விட்டார் எனதிடீரென  குற்றச்சாட்டு எழுப்பினார்.

இதனை அக்பர் மறுத்துள்ள நிலையில், அவரது மனைவியான மல்லிகா அக்பரும் பல்லவி பொய் சொல்லுவதாக என கூறினார்.  இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அக்பர் வெளியிட்ட அறிக்கையில்  பல்லவி மற்றும் எனக்கிடையே கடந்த 1994ம் ஆண்டில் கருத்தொருமித்த உறவு ஏற்பட்டது.  இது பல மாதங்களாக நீடித்தது.  இது எனது இல்வாழ்க்கையில் பெரிய அளவில் குழப்பத்தினை ஏற்படுத்தியது.  இதனால் அந்த உறவு முடிவுக்கு வந்தது என தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பல்லவி வெளியிட்டுள்ள செய்தியில், என் வாழ்வின் மிக வலி நிறைந்த நினைவுகளை நான் மீண்டும் வெளிகொண்டு வந்தேன்.  உடல்ரீதியில், பாலியல் ரீதியில் நான் தாக்குதலுக்கு ஆளான செய்தி தி வாஷிங்டன் போஸ்ட் இதழில் வெளியானது. 

நான் எனது 20 வயது தொடக்கத்தில் இருந்தேன்.  வளர்ந்து வரும் பத்திரிகையாளராக இருந்தேன்.  அவர் தலைமையிலான பத்திரிகையில் ஓர் ஊழியராக பணியில் இருந்தேன்.

அதற்கு பொறுப்பேற்பதற்கு பதிலாக, பெண்களை தொடர்ச்சியாக பாலியல் துன்புறுத்தல் செய்யும் சில பிரபலமடையாத நபர்களை போன்று அக்பர் தன்னை வெளிப்படுத்தினார்.  அது கருத்தொருமித்த உறவு என்கிறார்.  அது இல்லை.  அது வலுகட்டாயப்படுத்தப்பட்ட மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தினால் ஏற்பட்ட உறவு என அதில் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்..

என்னை பற்றி வெளியான செய்தியில் உள்ள ஒவ்வொரு வார்த்தையிலும் நான் உறுதியாக உள்ளேன்.  தொடர்ந்து எனது உண்மையை நான் பேசுவேன்.  இதனால் அவரால் பாலியல் தாக்குதலுக்கு ஆளான பிற பெண்களும் முன்வந்து அவர்களது உண்மைகளை பற்றி பேசுவர் எனவும் பல்லவி  தெரிவித்துள்ளார். பல்லவியுன் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது