ரூபாய் நோட்டு தடைக்கு பின், செல்லாது என அறிவிக்கப்பட்ட 1000 ரூபாய் நோட்டுகள் 99 சதவீதம் வங்கிக்குள் வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி திடீரென தனது இணையதளத்தில் தெரிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரூபாய் நோட்டு தடை அறிவிக்கப்பட்டு 8 மாதங்களாக நாடாளுமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் செல்லாத ரூபாய் நோட்டுகள் வந்துள்ள மதிப்பு குறித்து கேள்வி கேட்கப்பட்டு வருகிறது. அப்போதெல்லாம் ரூபாயை எண்ணிக்கொண்டு இருக்கிறோம் என்று கூறிவிட்டு சத்தமில்லாமல் இணையதளத்தில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

நாட்டில் கருப்புபணம் , ஊழலை ஒழிக்கும் நோக்கில் ரூ. 15.5 லட்சம் கோடி புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதிஅறிவித்தார். அதன் பின் செல்லாத ரூபாய் நோட்டுகள் வங்கிகள், தபால் நிலையங்கள் மூலம் மக்களிடம் இருந்து பெறப்பட்டு, புதிய ரூ.2000, ரூ.500 நோட்டுகள் வினியோகிக்கப்பட்டன.

அதன்பின், செல்லாத ரூபாய் நோட்டுகள் வங்கிக்குள் வந்துள்ளது குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர், அந்த நேரத்தில் மத்திய நிதி அமைச்சர் முறையாக பதில் அளிக்கவில்லை.

ரூபாய் நோட்டு தடை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கிலும், நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கும் மத்திய அரசு செல்லாத ரூபாய் நோட்டு வந்துள்ள மதிப்பை தெரிவிக்கவில்லை.

இதற்கிடையே கடந்த மார்ச் மாதம் ரிசர்வ் வங்கி அளித்த புள்ளி விவரங்களின்படி, 1000 ரூபாய் நோட்டுகள் மட்டும் ரூ. 8 ஆயிரத்து 925 கோடி மக்களிடம், வங்கிகள், கருவூலங்களில் புழங்கிக் கொண்டு இருந்தது. அதாவது, இந்த அளவு  பணம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படாமல் இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், பிப்ரவரி மாதம் நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மக்களவையில் பேசிய மத்திய நிதி துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கெங்வார், “ ரூ. 6.86 லட்சம் மதிப்புள்ள ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாகத் தெரிவித்தார்.

ஆனால், மார்ச் மாதம் ரிசர்வ் வங்கி வௌியிட்ட புள்ளிவிவரத்தில் ரூ.8 ஆயிரத்து 925 கோடி ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே மக்களிடம் புழக்கத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது. ஆகவே, மத்திய நிதி துறை இணையமைச்சரும், ரிசர்வ் வங்கியும் குழப்பமான அறிவிப்புகளை வௌியிட்டுள்ளனர்.

ஒருவேளை அந்த புள்ளிவிவரங்கள் சரியாக இருக்கும்பட்சத்தில் ரூபாய் நோட்டு தடைக்கு பின் 98.7 சதவீத ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே வந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தால், மீதமுள்ள 1.3 சதவீத ரூபாய் நோட்டுகள் மட்டுமே வங்கிக்குள் வரவில்லை என எடுத்துக்கொள்ள வேண்டும்.

அந்த ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ. 8 ஆயிரத்து 925 என்று கடந்த மார்ச் மாதம் அறிவித்தரிசர்வ் வங்கியின் மதிப்பாக இருக்கலாம். இது குறித்து ரிசர்வ் வங்கியிடம் கேள்வி எழுப்பியபோது, அது குறித்து பதில் அளிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

அவ்வாறு 1.3 சதவீதம் ஆயிரம் நோட்டுகள் வராமல் இருந்தால், ரிசர்வ் வங்கியின் முன்பு அறிவித்த புள்ளி விவரங்கள்படி, ரூ. 8 ஆயிரத்து 925 கோடி கருப்பு பணம் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது.