தெற்கு இங்கிலாந்தில் மினிபஸ் மீது 2 டிரக்குகள் மோதிய விபத்தில், சென்னையை சேர்ந்தவர்கள் உள்பட 8 இந்தியர்கள் பலியாகினர். 5 வயது சிறுமி உள்பட 3 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விடுமுறையை கழிக்க மற்றும் உறவினர்களை பார்ப்பதற்காக இங்கிலாந்துக்கு சுற்றுலா வந்திருந்த இந்தியர்கள் நேற்று முன்தினம் மினிபஸ்சில் பக்கிங்ஹாம்ஷயர் பகுதியில் உள்ள எம்1 நெடுஞ்சாலையில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

சென்னையில் இருந்து சென்ற ஒரு குடும்பத்தினரும் அந்த பஸ்சில் பயணம் செய்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த மினிபஸ் மீது 2 டிரக்குகள் மோதின.

2 டிரக்குகள் இடையே சிக்கிய மினிபஸ் மோசமாக சேதமடைந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த கோர விபத்தில், பஸ்சில் இரந்த 8 பேர் பலியானார்கள்.

மேலும் 5 வயது சிறுமி ஆண் மற்றும் பெண் ஒருவர் என மொத்தம் 3 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பெண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

விபத்தில் பலியான மினிபஸ் டிரைவர் அடையாளம் தெரிந்தது. அவர் இந்தியாவை சேர்ந்த சிரியாக் ஜோசப் என்று கண்டுபிடிக்கப்பட்டது. பலியானவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மினிபஸ் மீது மோதிய 2 டிரக்குகளின் டிரைவர்களும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

லண்டனில் உள்ள இந்திய தூதரகம் இது குறித்து கூறுகையில் இந்த கோர விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எங்களால் முடிந்த அளவுக்கு உதவிகளை செய்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளது.