பெண்கள் மற்றும் குழந்தை தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்த 5 இளம் பெண்களை, துப்பாக்கி முனையில் கடத்தி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் ஜார்கண்டில் நடந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டம், கோச்சாங் கிராமத்தில் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சிலர், பெண்கள் மற்றும் குழந்தை கடத்தல் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 19 ஆம் தேதி விழிப்புணர்வு நாடகம் ஒன்றை நடத்தினர். இதில் 5 இளம் பெண்கள் உட்பட சிலர் நாடகத்தில் பங்கேற்று நடித்து வந்தனர். 

விழிப்புணர்வு நாடகம் நடந்த இடத்துக்கு துப்பாக்கியுடன் வந்த சிலர், அந்த பெண்களை கடத்தி சென்றனர். கடத்தி செல்லப்பட்ட அந்த 5 பெண்களையும், அந்த கும்பல் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதனை அவர்கள், மொபைல் போனில் வீடியோ எடுத்தும், போலீசில் புகார் செய்தால், இந்த காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவதாகவும்
அவர்கள் மிரட்டல் விடுத்தனர்.

அந்த இளம் பெண்களை, மூன்று மணி நேரத்துக்குப் பிறகு அந்த கும்பல் விடுவித்துள்ளது. பிறகு தங்கள் கிராமத்துக்கு திரும்பிய அவர்கள், தங்களுக்கு நேர்ந்த கொடுமையைக் கூறியுள்ளனர்.

இதன் பின்னர், அவர்கள் தங்கள் குடும்பத்தாருடன் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் தெரிவித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், 3
தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். 5 பெண்கள் மிரட்டி கற்பழிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.