கடந்த 2014-16ம் காலகட்டத்தில் இந்தியாவில் 1,10,333 கற்பழிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக, மத்திய அரசு கூறியுள்ளது. உலக அளவில் தற்போது அதிக கற்பழிப்பு சம்பவங்களும், முறைகேடான பாலியல் குற்றங்களும் நடைபெறும் நாடாக இந்தியா மாறியுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள், பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதால், சர்வதேச அரங்கில் நன்மதிப்பு குறைய தொடங்கியுள்ளது. தமிழகம் தொடங்கி காஷ்மீர் வரையிலும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் குறிப்பாக, சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கொடிகட்டி பறக்கின்றன.சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, உலக தலைவர்கள்கூட இந்தியா பற்றி அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். பாலியல் குற்றங்களை குறைக்க, இந்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்படுகிறது. 

இந்த சூழலில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 18) முதல் தொடங்கியுள்ளது. இதையொட்டி, நாட்டில் நடைபெற்ற பாலியல் குற்ற சம்பவங்கள் பற்றிய புள்ளி விவரம் ஒன்றை, மத்திய இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ மாநிலங்களவையில் சமர்ப்பித்தார். அதில், 2014 முதல் 2016ம் ஆண்டு வரையான காலகட்டத்தில் மட்டும் இந்திய அளவில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் உச்சக்கட்டத்தில் இருந்துள்ளன. இந்த காலகட்டத்தில், மொத்தம் 1,10,333 கற்பழிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. 

இதன்படி, 2014ம் ஆண்டில் 36,735 கற்பழிப்புகளும், 2015ம் ஆண்டில் 36,735 கற்பழிப்புகளும், 2016ம் ஆண்டில் 38,947 கற்பழிப்புகளும் நிகழ்ந்துள்ளன. 2014ம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக மொத்தம் 3,39,457 குற்றச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதேபோல, 2015ம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக 3,29,243 குற்றச் சம்பவங்களும், 2016ம் ஆண்டில் 3,38,954 குற்றங்களும் நிகழ்ந்துள்ளன,’’ என்று கிரண் ரிஜிஜூ குறிப்பிட்டுள்ளார்.

 

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து காணப்படுவதாக, மத்திய அரசே ஒப்புக் கொண்டுள்ளதாக, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்ட தொடங்கியுள்ளன. இதுதொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், இந்தியாவின் தொன்மை வாய்ந்த சரித்திர அடையாளம் சர்வதேச அரங்கில் கேலிக்குரியதாக மாறிவிடும் என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர்.