நாட்டின் நலனை கருத்தில் கொண்டு 2024ம் ஆண்டில் இருந்து, சட்டப்பேரவைக்கும், மக்களவைக்கும் ஒன்றாக இணைத்து இரு கட்டங்களாக தேர்தல் நடத்தும் மத்திய அரசின் திட்டத்துக்கு நிதி ஆயோக் ஆதரவு அளித்துள்ளது.

சட்டப்பேரவைக்கும், மக்களவைக்கும் தனித்தனியாக தேர்தல் நடப்பதால் அரசுக்கு ஏராளமாக செலவாகிறது என்று நீண்டகாலமாகவே கூறப்பட்டு வருகிறது. இது தொடர்பாக முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி ஆகியோரும் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

கடந்த குடியரசு தின நிகழ்ச்சியின் போது, பேசிய பிரணாப் முகர்ஜி, “ தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் அது குறித்து ஆரோக்கியமான விவாதம் நடத்தவும் இதுதான் உகந்த நேரம். நாடு சுதந்திரம் பெற்ற பின் சட்டப்பேரவை மற்றும் மக்களவைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்ட முறைக்கு திரும்ப வேண்டும். இது குறித்து அரசியல் கட்சிகளிடம் தேர்தல் ஆணையம் ஆலோசிக்க வேண்டும்’’ என்று கூறி இருந்தார்.

கடந்த  பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், “ தேர்தல்களை அடிக்கடி நடத்துவதால், அரசுக்கு ஏராளமான செலவுகளும், இழப்புகளும் ஏற்படுகிறது. ஆனால், இரு தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து அரசியல் கட்சிகள் குறுகிய நோக்கில் பார்க்க கூடாது.

இந்த விஷயத்தை ஒரு கட்சியோ அல்லது அரசோ செய்ய முடியாது. ஒன்றாக இணைந்து இதற்கு தீர்வு காண வேண்டும். கடந்த 2009ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு ரூ.1,100 கோடியும், 2014ம் ஆண்டு தேர்தலுக்கு ரூ.4 ஆயிரம் கோடியும் செலவானது. ஏராளமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகிறார்கள், தொடர்ந்து ஆசிரியர்கள் இந்த பணியில் ஈடுபடுவதால் கல்வித்துறையும் பாதிக்கும்’’ என்றார்.

இந்நிலையில், 2017-18 முதல் 2019-20ம் ஆண்டுகளுக்கான 3 ஆண்டு  செயல்திட்டம் குறித்து நிதி ஆயோக் அமைப்பு அறிக்கையை சமீபத்தில் அரசிடம் அளித்தது. அதில் 2024ம் ஆண்டில் இருந்து சட்டப்பேரவைக்கும், மக்களவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

நிதி ஆயோக் வௌியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது-

நாட்டில் அனைத்து தேர்தல்களும் நியாயமாக, சுதந்திரமாக நடத்தப்பட வேண்டும். மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களை ஒன்றாக இணைத்து நடத்தி, குறைந்த அளவு பிரசாரம் செய்யும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

2024ம் ஆண்டில் இருந்து சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான ஆயத்த பணிகளை தொடங்குவோம். இதற்கு சில மாநிலங்களில் சட்டசபை நீட்டிக்கப்பட வேண்டும்.

நாட்டின் நலனை கருத்தில் கொண்டு இதை நடைமுறைப்படுத்தி, அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனும், அதிகாரிகளுடனும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு முறைப்படி விவாதித்து முடிவு  எடுக்கப்பட வேண்டும். இதற்கான குழுவை அமைத்து, நடைமுறைப்படுத்துவதற்கான செயல்திட்டங்களை வகுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.