18-வது பிறந்தநாளை கொண்டாடிய மறுநாளே பெற்ற மகளை அவரது தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் சந்த்ரலபடு மண்டல் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரிகா. இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சனிக்கிழமை தான் சந்திரிகா தனது 18-வது பிறந்தநாளை நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் உற்சாகமாக கொண்டாடியுள்ளார். பிறந்த நாள் பரிசாக மகளுக்கு தந்தை செல்போன் ஒன்றை பரிசாக ஆசை ஆசையாக வாங்கி கொடுத்துள்ளார்.    இந்த நிலையில் பிறந்த நாளுக்கு அடுத்த நாள் சந்திரிகா தனது தந்தை வாங்கிக் கொடுத்த செல்போனில் நீண்ட நேரமாக பேசியுள்ளார். இதனை நீண்ட நேரமாக சந்திரிகாவின் தந்தை கவனித்துக் கொண்டே இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் மகளுக்கு அருகாமையில் சென்றதும், அவர் செல்போனை ஒழித்து வைக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தந்தை, மகள் தங்களுடன் பேச செல்போன் வாங்கிக் கொடுத்தால் யாருடன் பேசிக் கொண்டிருக்கிறார் என்று கோபத்துடன் கேட்டுள்ளார்.  உடனடியாக சந்திரிகா ஒளித்து வைத்த செல்போனை எடுத்து பார்த்த போது அவர் ஒரு ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தது தெரியவந்துள்ளது.
 18 வயதில் என்ன ஆண் நண்பர் தேவைப்படுகிறது என்று தந்தை சந்திரிகாவை கண்டித்துள்ளார். அப்போது சந்திரிகா தான் அவரை காதலிப்பதாக கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த தந்தை கோபத்தின் உச்சிக்கே சென்றார். பிறகு கோடாரிக்கு பயன்படுத்தப்படும் மரப்பிடியை மகளை தாக்கியுள்ளார். நிலை குலைந்து கீழே சரிந்தார்.  மேலும்   தந்தை கோட்டையா தாக்கியதில், தலையில் படுகாயமடைந்த சந்திரிகா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, சந்திரிகாவின் தந்தை கோட்டையாவை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.