டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், உயிர் போகும்போது தங்கள் ஆன்மாக்கள் வீட்டுக்குள் இருந்து வெளியேற 11 குழாய்களை அவர்கள் இணைத்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.

டெல்லி  வடக்கு புராரி பகுதியில் அமைந்துள்ளது  சாந்த் நகர். இங்கு பூபிந்தர் என்பவரும் அவரின் சகோதரர் லலித் சிங் எஙனபவரும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இதில் பூபிந்தர் பலசரக்கு கடையும், லலித் சிங் தச்சுவேலையும் செய்து வந்தனர். பலசரக்குக் கடை வழக்கம் போல் காலை 6 மணிக்குத் திறக்கப்பட்டுவிடும். ஆனால், காலை 7.30 மணிஆகியும் திறக்கப்படவில்லை.

இதனால், அக்கம்பகத்தினர் சந்தேகமடைந்து, பூபிந்தர் வீட்டுக்கதவைத் தட்டியுள்ளனர். நீண்டநேரமாகியும் திறக்கப்படாததையடுத்து, போலீஸுக்கு தகவல் கொடுத்தனர்.

போலீஸார் வந்து கதவை உடைத்துப் பார்த்தபோது, குடும்பத்தில் உள்ள 7 பெண்கள், 4 ஆண்கள் உள்ளிட்ட 11 பேரும் இரும்பு உத்தரத்தில் தூக்குமாட்டி தற்கொலை செய்திருந்தனர். அவர்களின் கண்கள் கட்டப்பட்டு, கைகள் கட்டப்பட்டு, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தது. அவர்கள் வீட்டிலும் எந்தவிதமான தற்கொலைக்கடிதமும் இல்லை.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாணையில் அவர்களின் வழிபாட்டு முறை வித்தியாசமாக இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். மூட நம்பிக்கையால் நிகழ்ந்த தற்கொலையாக இருக்கலாம் என கருதுகின்றனர்.

அவர்களது வீட்டில் கைப்பற்றிய சில டைரிகள்  இதை உறுதிப்படுத்தும் வகையில் இருந்தன.  இறந்தவர்களின் வீட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் போலீசார் தீவிரமாக சோதனை நடத்தியதில்  வீட்டுக்குள் இருந்து 11 குழாய்கள் வெளியே நீட்டிக்கொண்டு இருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர். அந்த குழாய்கள் வேறு எந்த பொருளுடனும் இணைக்கப்படவும் இல்லை. 

11 பேரும் இறந்து கிடந்த அறையில் இருந்துதான் இந்த குழாய்கள் வெளியே நீண்டுகொண்டு இருந்தன. இது குறித்த விவரங்கள் அவர்கள் வைத்திருந்த டைரியில் காணப்பட்டது. அதாவது, தாங்கள் இறந்த பின் தங்களது ஆன்மா சொர்க்கத்துக்கு போக இந்த குழாய்கள் உதவும் என குறிப்பிடப்பட்டு இருந்ததாக தெரிகிறது. 

மூடத்தனத்தின் உச்சகட்டத்தில் அந்த குடும்பத்தினர் அக்கப்பக்கத்தில் வசிப்பவர்களுக்குக் கூட தெரியாமல் வாழ்ந்து வந்துள்ளனர். தொடர்ந்து விசாரண நடைபெற்று வருகிறது.