புதுடெல்லி: வடக்கு டெல்லியின் புராரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர்  இறந்த வழக்கில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. வீடுகளில் போலீசார் நடத்திய சோதனையில் ஒரு டைரியை கைப்பற்றியுள்ளனர். வடக்கு டெல்லி புராரி அருகே சன்ட் நகரில் உள்ள இரண்டடுக்கு மாடி கட்டிடத்தின் முதல் தளத்தில் ராஜஸ்தானிலிருந்து  குடிபெயர்ந்து வந்த குடும்பம் ஒன்று கடந்த 20 வருடங்களுக்கு மேலாக வசித்து வந்தனர். வீட்டின் மூத்த பெண்மணியான  நாராயண்(75), அவரது மகன்கள் புபிந்தர்(46), லலித் சிங்(42), மூத்த மகள் பிரதீபா(60), அவரது மருமகள் சுவிதா(42), டினா(38),  பேரக்குழந்தைகள் பிரியங்கா(30), சுவிதா(42)நீது(24),மீனு(22) மற்றும் பேரன் திரு(12) அனைவரும் ஒரே வீட்டில் வசித்தனர்.இதில் நாராணயன் மகன்கள் குருத்துவரா அருகில் பர்னிச்சர் கடையும் வீட்டின் கீழ் பகுதியில் மளிகை கடையும் நடத்தி  வந்தனர். தினமும் காலை 6 மணிக்கே குடும்பத்தினர் மளிகை கடையை திறந்து விடுவர். ஆனால், ஞாயிற்று கிழமையான நேற்று  நீண்டநேரமாகியும் கடை திறக்கவில்லை. இந்நிலையில் அவர்களது கடைக்கு பால் வாங்க வந்த பக்கத்து வீட்டுக்காரர், கடை  பூட்டியிருந்ததை கண்டு வீட்டின் மாடிக்கு சென்றார். அங்கு சென்று பார்த்தபோது கதவு திறந்த இருந்தது. உள்ளே எட்டிபார்த்தபோது,  11 பேரும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் தொங்கியவாறு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே போலீசுக்கு  தகவல் கொடுத்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்  சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல் சிசிடிவி பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதனையடுத்து காவல்துறையினர் அக்கம்பக்கத்தினரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட தகவலில் இந்த குடும்பத்தினருக்கு பண நெருக்கடி போன்ற எந்த பிரச்னையும் இல்லை என தெரியவந்துள்ளது. பிறகு போலீசார் வீட்டில் நடத்திய சோதனையில் ஒரு டைரி கைப்பற்றப்பட்டுள்ளது. மனித உடலானது தற்காலிகமானது, கண்களையும் வாயையும் மறைப்பதன் மூலம் பயத்தை வெல்ல முடியும் என அதில் எழுதப்பட்டிருந்ததாக காவலர்கள் தெரிவித்தனர். மேலும் அனைவரும் கண்களை கட்டிக்கொள்ளுங்கள்.. ஒன்றுமில்லை. ஆனால் மேலே உள்ளது உங்கள் கண்களுக்கு தெரிகிறதா.. துப்பட்டா அல்லது புடவையை கயிறாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஆலமரத்தை ஏழு நாட்கள் பயபக்தியுடன் வழிபடுங்கள். யாராவது வீட்டிற்கு வந்தால் அடுத்தநாள் அதனை செய்யுங்கள். இதனை செய்ய வியாழன் அல்லது ஞாயிற்றுக் கிழமைகளைத் தேர்வு செய்யுங்கள். வயதானவர்களால் நிற்க முடியாது என்றால் வேறோரு அறையில் கீழே படுத்துக்கொள்ளலாம். என எழுதப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.இதுகுறித்து பேசிய காவல்துறையினர், இந்த டைரியை படித்ததில் இந்தக் குடும்பத்தை சேர்ந்த யாரோ மூன்று பேர் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். ஆனால் அதன் பின்னர் குடும்பத்தினரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த செயலில் ஈடுபட்ட மூவர் யார்? யார், யாரை கொலை செய்தனர். கண்கள் மற்றும் வாயை கட்டி தூக்கில் மாட்டியது யார்? என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்று தகவல் தெரிவித்துள்ளனர்.