Asianet News TamilAsianet News Tamil

சாப்பிடுவதற்கு சுவையாகவும்.. ஆரோக்கியத்திற்கு இதமாகவும் இருக்கும் 'பூண்டு மிளகு சாதம்' கண்டிப்பா செய்யுங்க!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யவும், சிறந்த செரிமானத்திற்கும் பூண்டு மிளகு சாதம் செய்து சாப்பிடுங்கள்..ரெசிபி உள்ளே...

poondu milagu satham or garlic pepper rice recipe in tamil mks
Author
First Published Jan 13, 2024, 3:45 PM IST

'உணவே மருந்து' என்று நம் முன்னோர்கள் சொல்லுவதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதை நிரூபிக்கும் வகையில் ஒரு உணவு தான் 'பூண்டு மிளகு சாதம்'. இந்த சாதம் செய்வது மிகவும் சுலபம். இது எளிதான மற்றும் சுவையான உணவு ஆகும். இந்தப் பூண்டு மிளகு சாதம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா..? இதனால் செரிமானம் எளிதாகும், ஆரோக்கியத்திற்கு நல்லது  மற்றும் சுவையாகவும் இருக்கும். அதுமட்டுமின்றி சளி, இருமல், தொண்டை வலியால் அவதிப்படுபவர்களுக்கு பெஸ்ட் உணவு இதுவாகும். வீட்டில் கிடைக்கும் குறைந்த பட்ச பொருட்களை வைத்து, இந்த அரிசியை நொடியில் செய்யலாம். 

பூண்டின் ஆரோக்கிய நன்மைகள்:

  • பூண்டில் கலோரிகள் குறைவு மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது.
  • இது பல்வேறு ஊட்டச்சத்துகளின் சுவடு அளவைக் கொண்டுள்ளது. 
  • மேலும் அதிக ஆன்டிஆக்ஸிடன்கள் உள்ளன. 
  • இரத்த சர்க்கரையை சீராக்க உதவுகிறது.
  • மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. 
  • புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் இருக்கிறது.
  • உங்கள் கல்லீரலை பாதுகாக்க பூண்டு பெரிதும் உதவுகிறது.

கருப்பு மிளகு ஆரோக்கிய நன்மைகள்: 
கருப்பு மிளகு ஆரோக்கியமான மசாலாப் பொருட்களில் ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இது ஒரு சக்திவாய்ந்த குணப்படுத்தும் பண்பு கொண்டது மற்றும் வயிறு மற்றும் தொண்டை நோய்களை குணப்படுத்த பயன்படுகிறது. ஜலதோஷம் மற்றும் காய்ச்சலுக்கான சிறந்த வீட்டு வைத்தியம், புதிதாக அரைத்த மிளகுத்தூளுடன் ஒரு டீஸ்பூன் தேனைக் கலந்து சாப்பிடுவது. நாம் இப்போதெல்லாம் கடையில் வாங்கும் மிளகுத் தூளைப் பயன்படுத்துகிறோம், ஆனால் இந்த செய்முறைக்கு, நீங்கள் அனைவரும் வீட்டில் அரைத்த மிளகு மட்டுமே பயன்படுத்துங்கள். ஏனெனில், அது முழு உணவிற்கும் நல்ல நறுமணத்தையும் சுவையையும் தருகிறது. இப்போது இந்த சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலா.

தேவையான பொருட்கள்:
வடித்த சாதம் - 2 கப்
வெங்காயம் - 1/2
எண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2 
முந்திரிப் பருப்பு - 10
பல் பூண்டு - 10
மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையானஅளவு
கருவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை: 

  • இதற்கு முதலில், ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றவும். பின் சூடான எண்ணெயில் கடுகு கருவேப்பிலை காய்ந்த மிளகாய் கடலைப்பருப்பு முந்திரி பருப்பு சேர்த்து வறுக்கவும். 
  • பூண்டை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கடாயில் போட்டு முருகலாக வதக்கிக் கொள்ளவும்.
  • பூண்டு நன்றாக வதங்கிய பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். பிறகு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
  • கடைசியில் எடுத்து வைத்த சாதத்தை சேர்க்கவும், இவற்றுடன் மிளகுத்தூள் சேர்த்து சாதம் சூடேறும் வரை கலந்து விட்டு அடுப்பில் இருந்து இறக்கவும். அவ்வளவு தான் சுவையான பூண்டு மிளகு சாதம் ரெடி!!
Follow Us:
Download App:
  • android
  • ios