Death Penalty for Rape: பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும் நாடுகள்!
இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் பல நாடுகளில் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது. பல நாடுகளில் மரண தண்டனை மிகவும் கொடூரமான முறையில் நிறைவேற்றப்படுகிறது.
சவுதி அரேபியா
சவுதி அரேபியாவில் மிகவும் கொடூரமான முறையில் மரண தண்டனை வழங்கப்படுகிறது. இங்கு ஷரியத் சட்டம் அமலில் உள்ளது. இஸ்லாமிய சட்டத்தை பின்பற்றும் இந்த நாட்டில் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக விரைவாக தீர்ப்பு வழங்கப்படுகிறது. பாலியல் வன்கொடுமை அல்லது கொலைக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. குற்றவாளியின் தலை பொது இடத்தில் வைத்துத் துண்டிக்கப்படுகிறது. மிக முக்கியமாக, குற்றவாளி மேல்முறையீடு செய்வதற்கு மிகக் குறைந்த வாய்ப்பு மட்டுமே வழங்கப்படுகிறது.
ஈரான்
ஈரானிலும் இஸ்லாமிய சட்டத்தின் கீழ் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது. இங்கு பொது இடங்களில் இல்லாவிட்டாலும், சிறையிலேயே குற்றவாளிகள் தூக்கிலிடப்படுகிறார்கள். ஆனால், ஈரானில் வழங்கப்படும் மரண தண்டனைகளின் சட்டப்பூர்வ வெளிப்படைத்தன்மை குறித்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
பாகிஸ்தான்
பாகிஸ்தான் 2020ஆம் ஆண்டில் தனது சட்டங்களில் திருத்தங்களைச் செய்து, பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் சட்டத்தை இயற்றியது. கூட்டுப் பாலியல் வன்கொடுமை, சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை ஆகியவற்றுக்கு மரண தண்டனை வழங்கப்படும். சில சந்தர்ப்பங்களில், குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் கருத்தடை செய்யப்படுகிறது.
வங்கதேசம்
வங்கதேசத்தில் 2020ஆம் ஆண்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் ஒடுக்குமுறை தடுப்பு (திருத்த) மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றின் எதிரொலியாக மக்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து இந்தச் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. இருப்பினும், பெரும்பாலும் தண்டனைதான் வழங்கப்படுகிறது.
எகிப்து
எகிப்தில் சிறார் பாலியல் வன்கொடுமை அல்லது கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. எகிப்தில் ஷரியத் சட்டத்துடன் சிவில் சட்டமும் நடைமுறையில் உள்ளது. ஆனால் பாலியல் பலாத்கார வழக்கில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
ஐக்கிய அரபு அமீரகம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு மிகவும் கொடூரமான தண்டனை வழங்கப்படுகிறது. சிறார் பாலியல் வன்கொடுமை மிக மோசமான குற்றமாகக் கருதப்படுகிறது. பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனைதான். குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவார்கள் அல்லது பொது இடத்தில் சுட்டுக் கொல்லப்படுவார்கள்.
சீனா
சீனாவில் பாலியல் வன்கொடுமை கொடூரமான குற்றமாகக் கருதப்படுகிறது. இங்கும் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது. பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள் அல்லது விஷ ஊசி போட்டுக் கொல்லப்படுகிறார்கள்.
இந்தியா
இந்தியாவில் நிர்பயா சம்பவத்திற்குப் பிறகு கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டன. 2018ஆம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி, 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. 2013ஆம் ஆண்டு குற்றவியல் சட்டம் (திருத்த) சட்டமும் தொடர் குற்றவாளிகளுக்கும் மிகக் கொடூரமான பாலியல் குற்ற வழக்குகளிலும் மரண தண்டனை விதிக்க வழிவகுக்கிறது. இருந்தாலும், இந்தியாவில் பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை விதிப்பது அரிதாகவே உள்ளது.