நல்ல பெற்றோராக வேண்டுமா ? அப்போ இதை செய்யுங்க
குழந்தைகளை வளர்ப்பது என்பது தற்போதைய காலகட்டத்தில் மிகுந்த சவாலானதாக உள்ளது. ஏனெனில் பெற்றோர் வேலைக்கு செல்பவர்களாக இருப்பதால் குழந்தையை Care Taker மையங்களில் சேர்த்துவிடுகின்றனர். இதனால் குழந்தைகளுக்கு நல்லது எது, கெட்டது எது என்ற வித்தியாசங்கள் புரியாமல் வளருகின்றனர்.

குழந்தைகளுக்கு வழிகாட்டுதல்
நாம் சிறுபிள்ளையாக இருக்கும்போது நம் குடும்பங்களில் தாத்தா, பாட்டி, சித்தி, சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா என்ற உறவுகள் நிறைய இருந்தது. ஆனால் இப்போது தனிக்குடும்பங்கள் அதிகரித்துள்ளதால் தாத்தா, பாட்டி உறவு முறையே சற்று தூரமாக உள்ளது.
ஒரு குழந்தையை நல்ல குழந்தையாக வளர்க்க பெரிய விதிகள் எதுவும் இல்லை. பெற்றோர்கள் குழந்தைகளிடம் அன்பு, அக்கறை, கவனத்துடன் குழந்தைகளை பார்த்து கொண்டாலே போதுமானது. இந்த பதிவில் குழந்தைகளுக்கு கற்று கொடுக்க வேண்டிய அல்லது குழந்தைகள் முன் நாம் செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத விஷயங்கள் என்ன என்பதை குறித்து பார்க்கலாம்.
குழந்தைகள் நன்றாக படிக்க, விளையாட்டுகளில் முதலில் வர இப்படி எந்த திறமையை அவர்கள் வெளிக்கொண்டுவர வேண்டும் என பெற்றோர்கள் வழிகாட்ட வேண்டும். பெற்றோர்களின் ஆசைகளையும், அவர்களின் கனவுகளையும் குழந்தைகளிடத்தில் திணிக்கக் கூடாது. அவர்களின் திறமை என்ன, எதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்பதை பார்த்து அதனை எவ்வாறு அடைய வேண்டும் என்பதற்கு பெற்றோர்கள் சரியான வழிகாட்டியாக இருக்கவேண்டும்.
குழந்தைகளுக்கு சுதந்திரம்
குழந்தைகளின் சுதந்திரத்தை பெற்றோர்கள் எப்போதும் பறிக்க நினைக்கக்கூடாது. அவர்களின் வேலைகளை அவர்களே செய்ய பெற்றோர்கள் அனுமதிக்கவேண்டும். குழந்தைகளின் வீட்டுப்பாடம், அவர்களின் வேலை, நண்பர்கள் சந்தித்தல், விளையாடுதல் போன்றவற்றிற்கு பெற்றோர்கள் தேவையான சுதந்திரத்தை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். நண்பர்களை சந்திக்க மறுப்பதால் அவர்கள் பொய் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள். எனவே அவர்கள் தப்பு செய்யும்படியான சந்தர்ப்பத்தை பெற்றோர்கள் உருவாக்கித்தர கூடாது. அவர்கள் வீட்டுப்பாடம் செய்வதற்கு நீங்கள் வழிகாட்டியாக இருக்கலாம். அவர்கள் பள்ளிகளில் செய்யவேண்டிய Activitiesஐ எவ்வாறு செய்வது என்று பெற்றோர்கள் தான் வழிநடத்தி கற்றுக்கொடுக்க வேண்டும்.
நல்ல பழக்கங்களை கற்று கொடுக்க வேண்டும்
குழந்தைகள் முன் பெற்றோர்கள் நல்லவற்றையே பேச வேண்டும். மற்றவர்கள் பற்றி வதந்தி பேசுவது, மற்றவர்களை இழிவாக பேசுவது போன்ற செயல்களை செய்யக்கூடாது. நாம் நல்ல பெற்றோராக இருந்தால் மட்டுமே நம்மால் குழந்தைகளுக்கு ஒரு நல்ல முன்மாதிரியாக இருக்க முடியும். நம் குழந்தை கருணை, அன்பு, இரக்கம், அனுதாபம், நல்ல நடத்தை உள்ளிட்ட நற்குணங்களோடு இருக்க வேண்டுமென்றால் நாம் சரியாக நடந்து கொள்ள வேண்டும்.
முரட்டுத்தனமாக இருக்கக்கூடாது
சிலர் குழந்தைகள் முன் தனது மனைவியை அடித்து துன்புறுத்துவது, இழிவாக பேசுவது, சண்டைபோடுவது போன்றவற்றை செய்தால் குழந்தைகளுக்கு அது ஒரு தவறான முன்மாதிரியாக அமைந்துவிடும். வீட்டிலிருப்பவர்களிடமும், நம்மை சுற்றி இருக்கும் அக்கம் பக்கத்தினருடனும் நாம் நல்லவிதமாக நடந்து கொள்ளவேண்டும். மற்றவர்களிடம் ஏதாவது குறை இருந்தால் அதற்காக சண்டைபோடாமல் அவர்களுக்கு புரியும் வகையில் எடுத்துக்கூற வேண்டும்.
குழந்தைகளை நேசிக்க வேண்டும்
இந்த அவசரமான உலகத்தில் யாருக்கும் அன்பு, பாசம் காட்ட நேரம் இருப்பதில்லை. ஆனால் நாம் வேலைகளுக்கு இடையே நம் குழந்தைகளுடன் அன்பாக பேசுவது, விடுமுறை நாட்களில் அவர்களுடன் விளையாடுவது, ஒன்றாக உணவு சாப்பிடுவது போன்ற பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும்.
மன்னிப்பு கேட்க வேண்டும்
குழந்தைகள் தவறு செய்தால் அதனை திருத்தும் நாம்,நம்முடைய தவறுகளை பெரிதாக எண்ணுவதில்லை. யார் செய்தாலும் தவறு தவறு தான் என்ற மனப்பான்மை நம்மிடத்தில் இருக்க வேண்டும். நம்மிடத்தில் தவறு இருந்தால் நாம் குழந்தைகளிடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது குழந்தைகளும் நல்ல குணம் உள்ளவர்களாக வளர்வார்கள்.
ஒழுக்கத்தை கற்றுக்கொடுத்தல்
ஒரு மனிதனின் வாழ்வில் ஒழுக்கம் என்பது முக்கியமான ஒன்றாகும். குழந்தை பருவம் முதலே குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்று கொடுக்கவேண்டும். பெரியவர்களை எவ்வாறு மதிக்கவேண்டும் என்பதை நாம் தான் குழந்தைகளுக்கு கற்று கொடுக்க வேண்டும்.
மனம்விட்டு பேச வேண்டும்
குழந்தைகளுடன் பெற்றோர்கள் தினமும் ஒரு மணிநேரமாவது பேச வேண்டும். பள்ளிக்கூடத்தில் இன்று என்ன நடந்தது என்று நாம் அவர்களிடத்தில் பேசும் போது, அவர்களுக்கு நம் மேல் இருக்கும் நம்பிக்கை அதிகரித்து எதாவது பிரச்னை இருந்தால் முதலில் பெற்றோர்களிடம் தான் கூறுவார்கள்.