Sri Rangam : திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேர்த்திருவிழா கோலாகல தொடக்கம் !
பிரசித்திபெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், 'விருப்பன் திருநாள்' என்றழைக்கப்படும் சித்திரைத் தேரோட்டம் துவங்கியது.
108 வைணவ தலங்களில் முதன்மையானதாக விளங்கும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர்த்திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்தாண்டுக்கான சித்திரை தேர்த்திருவிழா கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரைத் தேரோட்ட வைபவம் இன்று காலை தொடங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது ரங்கா... ரங்கா... என பக்தர்கள் முழக்கமிட்டது விண்ணை எட்டியது.
பக்தர்களுக்கு குடிநீர் வசதியும் பாதுகாப்பு வசதியும் செய்யப்பட்டிருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காலை 6 மணி முதல் ஸ்ரீரங்கத்தில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. தேரோட்டம் முடிந்த பிறகு மின்விநியோகம் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
நாளைய 30ஆம் தேதியன்று சப்தாவரணமும், மே 1ஆம் தேதியன்று ஆளும் பல்லக்குடன் சித்திரை திருவிழா நிறைவடையும். தஞ்சையில் நடந்த விபத்திற்குப் பின்னர் திருச்சி மட்டுமல்லாது அனைத்து மாவட்ட திருவிழாக்களில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.