கிறிஸ் கெய்ல் சாதனையை தூள் தூளாக்கிய ரோகித் சர்மா; சிக்ஸர் மழையில் புது ரெக்கார்ட்!
இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2வது ஒருநாள் போட்டியில் சதம் விளாசிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா, கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடித்துள்ளார்.

கிறிஸ் கெய்ல் சாதனையை தூள் தூளாக்கிய ரோகித் சர்மா; சிக்ஸர் மழையில் புது ரெக்கார்ட்!
இந்தியா-இங்கிலாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடர் நடந்து வருகிறது. நாக்பூரில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2வது ஒருநாள் போட்டி ஒடிசாவின் கட்டாக்கில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 304 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
சிறப்பாக விளையாடிய பென் டெக்கெட் (56 பந்தில் 65 ரன்), ஜோ ரூட் (69 ரன்) அரைசதம் அடித்தனர். இந்திய அணி தரப்பில் ஜடேஜா 10 ஓவர்களில் 35 ரன் கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார். பின்பு விளையாடிய இந்திய அணி 44.4 ஓவர்களிலேயே 6 விக்கெட் இழந்து 308 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா அதிரடி சதம் (90 பந்தில் 119 ரன்கள்) விளாசினார். இதில் 12 பவுண்டரிகள், 7 சிக்சர்கள் அடங்கும்.
இந்தியா-இங்கிலாந்து ஓடிஐ
சுப்மன் கில் (52 பந்தில் 60 ரன்), ஷ்ரேயஸ் ஐயர் (44), அக்சர் படேல் (41) அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடரை 2 0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. சூப்பர் சதம் விளாசிய ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். சமீப காலமாக டெஸ்ட் போட்டிகளில் சொதப்பிய ரோகித் சர்மா, இந்த சதத்தின் மூலம் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். மேலும் இந்த போட்டியின் மூலம் 'சிக்சர் மன்னன்' கிறிஸ் கெய்ல் சாதனை ஒன்றை ரோகித் சர்மா தகர்த்தெறிந்துள்ளார்.
அதாவது இந்த போட்டியில் ரோகித் சர்மா மொத்தம் 7 சிசர்களை பறக்க விட்டார். இதன்மூலம் ஓடிஐயில் அவரது மொத்த சிக்சர் 338 ஆக உயர்ந்துள்ளது. ஓடிஐயில் அதிக சிக்சர்கள் (331 சிக்சர்கள்) விளாசியவர்கள் பட்டியலில் கிறிஸ் கெய்ல் 2வது இடத்தில் இருந்த நிலையில், ரோகித் சர்மா அவரது சாதனையை முறியடித்து 2வது இடம் சென்றுள்ளார். ஓடிஐயில் பாகிஸ்தானின் ஷாகித் அப்ரிடி 351 சிக்சர்களுடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ருத்ர தாண்டவம் ஆடிய ரோஹித்! இங்கிலாந்துடன் 2வது ஒருநாள் போட்டியிலும் இந்தியா வெற்றி!
ரோகித் சர்மா சதம்
ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த இந்தியர்களின் பட்டியலில் ரோகித் சர்மா (32 சதம்), விராட் கோலி (50 சதம்), சச்சின் டெண்டுல்கர் (49 சதம்) ஆகியோருக்கு அடுத்து 3வது இடத்தில் இருக்கிறார். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது ஃபார்மையும் அணியில் தனது இடம் குறித்தும் கேள்வி எழுப்பிய விமர்சகர்களையும் இறுதியாக ஒரு அபார சதத்தின் மூலம் அமைதிப்படுத்தியுள்ளார்.
விராட் கோலி பேட்டிங்
இந்திய அணியில் ரோகித் சர்மா மீண்டும் பார்முக்கு திரும்பினாலும், விராட் கோலி தொடர்ந்து படுமோசமாக விளையாடி வருகிறார். 2வது ஓடிஐயில் 20வது ஓவரில் அடில் ரஷீத் வீசிய பந்தில் கோலி வெறும் 6 ரன்களுக்கு அவர் ஆட்டமிழந்தார். மீண்டும் சிறப்பாக விளையாடத் தவறியதால், விராட் கோலி மீண்டும் பிசிசிஐ தேர்வுக்குழுவினர் மற்றும் இந்திய அணி நிர்வாகத்தின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்க உள்ள நிலையில், விராட் கோலியின் மோசமான பார்ம் இந்திய ரசிகர்களை கவலையடைச் செய்துள்ளது.
IND vs ENG 2nd ODI: அறிமுக போட்டியிலேயே புதிய சாதனை படைத்த வருண் சக்கரவர்த்தி!