RAIN ALERT : வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் மழை பெய்யுமா.? வானிலை மையம் தகவல்
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இதனால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
காற்றழுத்த தாழ்வு பகுதி
மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேற்கு, வட மேற்கு நோக்கி நகர்ந்து தெற்கு ஒடிசா வடக்கு ஆந்திர கரையோரம் நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இல்லையென கூறப்படுகிறது.
மிதமான மழைக்கு வாய்ப்பு
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (28.08.2024) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை மற்றும் நாளை மறுதினம் (29.08.2024 மற்றும் 30.08.2024) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
சென்னை வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 - 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
28.08.2024 முதல் 01.09.2024 வரை: மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்:
28.08.2024: தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
29.08.2024: மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், தெற்கு வங்கக்கடல் மற்றும் வடக்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.