முதல் அமைச்சராகும் வாய்ப்பை தடுத்த மனைவி? ஜெ.உதவியாளர் பூங்குன்றன் சொன்ன அதிர்ச்சி தகவல்..!
தாம் முதல் அமைச்சராகும் வாய்ப்பை மனைவி தடுத்ததாக பூங்குன்றன் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கனவு வந்தது. அது சுவாரசியமாகவும் இருந்தது. இன்று முழுதும் அதை நினைத்து நினைத்து என் மனம் சிரித்துக் கொண்டே இருந்தது. கனவில் நான் இந்திய தேர்தல் ஆணையராக வலம் வந்தேன். டி .என்.சேஷன் போல் பெயர் எடுக்க வேண்டும் என்று எனக்குள் இருந்த தீராத ஆசைதான் இந்த கனவு வருவதற்கு காரணமாக இருக்கும் என்றே நினைக்கின்றேன்.
poongundran
நான் இந்திய தேர்தல் ஆணையராக இருக்கும்போது, தமிழ்நாட்டில் சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் நடைபெற்றது. வாக்காளர்களுக்கு எல்லோரும் வித்தியாசமான முறையில் பணத்தை விநியோகம் செய்து கொண்டிருந்தார்கள். நானும் ஆட்களை வைத்து எவ்வளவோ அவற்றை தடுக்க முயற்சி செய்து, முடியாமல் போனேன். வேறு வழி தெரியாமல் அமைதிய காத்தேன். தேர்தல் நெருங்கும் வேளையில் பண பட்டுவாடாக்கள் அவரவர்களுக்கு திருப்தி தரும் வகையில் நிறைவு பெற்றிருந்தது. பணத்தை காரணம் காட்டி, இந்த தேர்தல் ரத்து செய்யப்படுகிறது என்று அறிவித்தேன். தலைவர்கள் எல்லாம் என்னை வசைபாடத் துவங்கிவிட்டார்கள். ஆனால் மக்களோ என்னை போற்றத் தொடங்கி இருந்தார்கள். மக்களின் போற்றுதலை நானும் ரசிக்க தொடங்கி இருந்தேன்.
சில மாதங்களுக்குப் பிறகு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. மீண்டும் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருந்தது. போன தேர்தலில் நடந்தது போலவே இந்த தேர்தலிலும் பணப் பட்டுவாடா தீவிரமாக நடைபெற்றது. நானும் மத்திய பாதுகாப்புப் படை போன்ற எல்லா படைகளையும் வைத்து தடுக்க முயற்சி செய்தேன். ஆனாலும் முடியவில்லை. ஆனால் இந்த முறை நானே தடுப்பதற்கு ஆசைப்படவில்லை. காரணம் மக்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள் என்பதுதான். எப்படி இவர்கள் இவ்வளவு பணம் கொடுக்கிறார்கள் என்று எனக்கே பிரமிப்பு வந்தது. சரி மக்களுக்கு பயன்படட்டுமே என்று அமைதி காத்தேன்.
மீண்டும் பணப் பட்டுவாடா முடிந்த பிறகு இந்த முறையும் பணத்தை காரணம் காட்டி தேர்தலை நிறுத்தினேன். மீண்டும் தலைவர்கள் என்னை வசைபாடத் தொடங்கி இருந்தார்கள். மக்களோ இவரை போல ஆளுமை கொண்ட தேர்தல் ஆணையர் கிடையாது என்று பாராட்டி பட்டம் கொடுக்க ஆரம்பித்தார்கள். அடுத்தடுத்து தேர்தல் ரத்தால் கிடைத்த பணத்தை வைத்து மக்கள் மகிழ்ச்சியோடு இருந்தார்கள். நான் செல்லும் இடங்களில் எல்லாம் எனக்கு ஒரே பாராட்டு மழை. அடைமொழி கொடுத்து என்னை அழைக்கத் தொடங்கி இருந்தார்கள். எனக்கோ உள்ளுக்குள் ஒரே மகிழ்ச்சி.
மீண்டும் தேர்தலை அறிவித்தேன். மீண்டும் அரசியல்வாதிகள் பணம் கொடுக்கத் தொடங்கியிருந்தார்கள். ஆனால் இந்த முறை அவரவர் வசதிக்கேற்ப குறைவாகவே கொடுத்தார்கள். மனம் மகிழ்ந்தது. தேர்தல் நடைபெற்றது. ஒரு கட்சி வெற்றி பெற்றது. மக்களெல்லாம் இந்த தேர்தல் ஆணையர் முதலமைச்சராக வரவேண்டும். அப்போதுதான் நாடு நல்லாயிருக்கும் என பேட்டி கொடுக்க ஆரம்பித்தார்கள். நானும் முதலமைச்சர் ஆகும் காட்சியை காண மனம் பரபரத்துக் கொண்டிருந்த வேளையில், மணி 6 ஆயிருச்சுங்க.. எழுந்திரிங்க..! என்று என் மனைவி சத்தம் போட்டார். முதல் அமைச்சராகும் வாய்ப்பை தடுத்த மனைவியை திட்டிக்கொண்டே எழுந்தேன் என பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.