ஆம்ஸ்ட்ராங் கொலையில் நெல்சன் மனைவியிடம் விசாரணை ஏன்.? மொட்டை கிருஷ்ணாவுடன் பேசியது என்ன.? வெளியான தகவல்
வட சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய சம்போ செந்தில் தலைமறைவாக உள்ள நிலையில், அவரது கூட்டாளி மொட்டை கிருஷ்ணா தாய்லாந்து தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது. இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷா, கிருஷ்ணாவுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்ததால், போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு
வட சென்னையில் முக்கிய தலைவர்களில் ஒருவர் ஆம்ஸ்ட்ராங்க, தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தார். கடந்த மாதம் ஜூலை 5ஆம் தேதி பெரம்பூரில் உள்ள தனது புதிய வீட்டின் கட்டுமானத்தை பார்க்க வந்த போது மர்ம நபர்கள் சுற்றி வளைத்து வெட்டி கொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் நாட்டையே அதிர்ச்சி அடைய செய்துள்ள நிலையில் இந்த வழக்கு தொடர்பாக காவல்நிலையத்தில் 11 பேர் சரண் அடைந்தனர். அவர்களில் திருவெங்கடம் என்ற குற்றவாளி தப்பிக்க முயற்சித்தாக கூறி போலீசார் என்கவுண்டரில் சுட்டு கொன்றனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இயக்குனர் நெல்சன் மனைவிக்கு செக் வைக்கும் போலீஸ்- வெளியான பகீர் தகவல்
24 பேர் கைது- தொடரும் விசாரணை
இதனையடுத்து கைதானவர்கள் கொலைக்கு பின்னனியில் யார் உள்ளார்கள் என்ற தகவலை தெரிவித்தனர். இதில் திமுக, அதிமுக,பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சியின் நிர்வாகிகள் என மொத்தமாக 24 பேர் கைது செய்யப்பட்டனர். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு கூலிப்படைக்கு பணம் கொடுக்க பல ரவுடிகள் மற்றும் முன் விரோதம் காரணமாக பலரும் பணம் கொடுத்தது தெரியவந்தது. குறிப்பாக இந்த கொலை வழக்கில் சிறையில் இருந்து பிரபல ரவுடி நாகேந்திரன் ஸ்கெட்ச் போட்டு கொடுத்ததாகவும் இதனை சம்போ செந்தில் செய்து முடித்தாகவும் கூறப்படுகிறது.
சம்போ செந்தில்- மொட்டை கிருஷ்ணா
இதனிடையே சம்போ செந்திலை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் தொடர்ந்து தலைமைறவாகவே இருந்துள்ளார். பல இடங்களில் தேடியும் இன்னும் சிக்கவில்லை. இந்தநிலையில் சம்போ செந்திலின் கூட்டாளியான வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணாவை போலீசார் தேடி வந்த நிலையில் கடந்த வாரம் காரிலையே மதுரை சென்ற மொட்டை கிருஷ்ணா அங்கு விமான நிலையத்தில் இறங்கிவிட்டு தனது காரை சிவா என்ற நபரிடம் கொடுத்து சென்னைக்கு அனுப்பியுள்ளார். காரோடு சென்னை வந்த சிவாவை மடக்கி பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது மொட்டை கிருஷ்ணா மதுரையில் இருந்து விமானம் மூலம் தாய்லாந்து சென்றதாக தெரிவித்துள்ளார்.
நெல்சன் மனைவியிடம் விசாரணை
இதனையடுத்து மொட்டை கிருஷ்ணா தொலைபேசியில் யாரோடு பேசினார் என போலீசார் விசாரிக்க தொடங்கினர். அப்போது இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷா பலமுறை பேசியுள்ளார். இதனையடுத்து கிருஷ்ணா வெளிநாடு தப்பி செல்ல மோனிஷா உதவி செய்தாரா என போலீசார் விசாரணையில் இறங்கினார். அப்போது மோனிஷா போலீசாரிடம் கூறுகையில், கிருஷ்ணா தனது பள்ளி கால தோழர் என தெரிவித்துள்ளார். வழக்கு ஒன்று தொடர்பாக கிருஷ்ணாவிடம் பேசியதாக தெரிவித்துள்ளார்.
மொட்டை கிருஷ்ணாவுடன் பேசிய என்ன.?
மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கிருஷ்ணாவிற்கு தொடர்பு இருப்பது தனக்கு தெரியாது என கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் மோனிஷாவை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் வர வேண்டும், வெளியூர் செல்லக்கூடாது எனவும் போலீசார் அறிவுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.