உள்ளாட்சி தேர்தலுக்காக அணி மாறாமல் காத்திருக்கும் கட்சிகள்.! திமுக- அதிமுக- பாஜகவின் திட்டம் என்ன.?
தமிழகத்தில் 27 மாவட்ட ஊராட்சிகளின் பதவிக்காலம் டிசம்பரில் முடிவடைகிறது. டிசம்பரில் தேர்தல் நடத்துவதா அல்லது 2025 வரை நீட்டிப்பதா என அரசு ஆலோசிக்கும் நிலையில், திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் எதிர்கொள்ள மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடு தீவிரம்
தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு உதவியாக இருப்பது உள்ளாட்சி அமைப்புகள், அந்த வகையில் சுமார் 8 ஆண்டுகள் நடைபெறாமல் இருந்த தேர்தல் கடந்த 2019ஆம் ஆண்டு 27 மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் போது நடத்தப்பட்டது. இந்த தேர்தல் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடத்தப்பட்டது. இதில் ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பதவிக்காலம் வருகிற டிசம்பர் மாதம் முடிவடையவுள்ளது.
அனைத்து ஊராட்சிகளும் கலைப்பா.?
அதே நேரத்தில் மீதமுள்ள 9 மாவடங்களுக்கு கடந்த 2022ஆம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. இவர்களின் பதவிக்காலம் 2027 ஆம் ஆண்டு வரை உள்ளது. எனவே வருகிற டிசம்பர் மாதம் அனைத்து ஊராட்சிகளையும் கலைத்து விட்டு தேர்தல் நடத்தலாமா.? அல்லது தனி அதிகாரி நியமனம் செய்யப்பட்டு 2025ஆம் ஆண்டு வரை நீட்டிக்கலாமா என திமுக தலைமை ஆலோசித்து வருகிறது.
திமுக கூட்டணியின் நிலைப்பாடு.?
அதே நேரத்தில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலை எதிர்கொள்ள திமுக தலைமை மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி மாவட்ட நிர்வாகிகளை அலர்ட் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள், மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளது. எனவே கடந்த முறையை போன்று இந்த முறையும் திமுக கூட்டணியில் தங்களுக்கு ஏற்ற இடங்களை பெற்று தேர்தலை திமுகவோடு இருந்தே சந்திக்க இந்த கட்சிகள் முடிவு செய்துள்ளது.
அதிமுக கூட்டணியில் புதிதாக யார் .?
அதே நேரத்தில் அதிமுகவும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகியுள்ளது. அதிமுக செயற்குழு கூட்டத்தில் தேர்தலுக்கு தயாராகும் படி அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே அதிமுக கூட்டணியில் தற்போது தேமுதிக மற்றும் எஸ்டிபிஐ கட்சி மட்டுமே உள்ளது. எனவே இந்த கூட்டணியை வைத்து தேர்தலை எதிர்கொண்டால் பின்னடைவே கிடைக்கும் எனவே தங்கள் அணியில் புதிய கட்சிகளை இணைக்க திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும்; தளபதி விஜய் பரபரப்பு அறிக்கை!
பாஜக கூட்டணியில் பாமக நிலை என்ன.?
பாஜகவை பொறுத்தவரை தங்கள் அணியில் முக்கிய கட்சியாக பாமக உள்ளது. அடுத்ததாக அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ்,டிடிவி உள்ளிட்டோர் உள்ளனர். எனவே இந்த அணியை வைத்து உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பாமக கடைசி நேரத்தில் எந்த பக்கம் செல்லும் என தெரியாமல் உள்ளது. எனவே டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் களம் இறங்க தயாராக உள்ளது.