சென்னையில் ஃபார்முலா கார்பந்தயம்.! எப்போது நடைபெறுகிறது.? இலவச அனுமதியா.? வெளியான போட்டி அட்டவணை
தமிழ்நாடு அரசு, சென்னையில் முதல் முறையாக இரவு நேர ஃபார்முலா 4 பந்தயத்தை நடத்தவுள்ளது. 3.5 கிமீ சுற்றளவு கொண்ட சர்க்யூட்டில் நடைபெறும் இந்தப் போட்டியை காண 8,000 பேர் வரை அனுமதிக்கப்படுவார்கள். பார்வையாளர்களுக்கான கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சென்னை ஃபார்முலா 4 ரேசிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயத்தை நடத்த உள்ளது. வரும் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் இந்தியாவில் முதல் இரவு நேர ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயத்தை நடத்த உள்ளது. இதன் மூலம் தெற்காசியாவிலேயே இரவு ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் பந்தயத்தை நடத்தும் முதல் நகரமாக சென்னை திகழ்கிறது.
3.5 கிமீ சுற்றளவு கொண்ட சர்க்யூட்டில் இப்பந்தயம் நடத்தப்படுகிறது. இந்த சர்க்யூட் தீவு திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை மற்றும் மவுண்ட் ரோடு ஆகியவற்றில் அமைந்துள்ளது. இது தெற்காசியாவிலேயே மிக நீளமான ஸ்ட்ரீட் சர்க்யூட் எனபது குறிப்பிடத்தக்கது. கார் பந்தயத்திற்காக மூன்று 3.5 கிலோமீட்டர் தூரத்திற்கு ஏற்கனவே போடப்பட்டிருந்த சாலைகள் அகற்றப்பட்டு கார் பந்தயத்திற்கு ஏற்றவாறு சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
போட்டிகள் அனைத்தும் இரவு நேரத்தில் நடைபெற இருப்பதால் சாலையின் இரு பக்கங்களிலும் நூற்றுக்கு மேற்பட்ட உயர் மின் கம்பங்களில் அதிக வாட் உடைய மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதால், இரவு பகலை போல காட்சி அளிக்கிறது. இந்த கார் பந்தயத்தை சாலையின் இரண்டு பக்கங்களிலும் பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் என சுமார் 8 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பந்தயத்தை பார்க்கும் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களுக்கு எந்தவித ஆபத்து ஏற்படாத வகையில் பாதுகாப்புகளும் செய்யப்பட்டிருக்கிறது. பாதுகாப்பிற்காக 4 அடி உயரத்திற்கு கான்கிரீட் தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்தநிலையில் போட்டிக்கான நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சனிக்கிழமை காலை நடைபெறும் போட்டியை பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கார் பந்தயத்தை காண டிக்கெட் விலையாக 1699 ரூபாய் முதல் 10,999 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்கள் அனைத்தும் இணையதளம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் போட்டியை கான வரும் பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் எந்தெந்த பொருட்களை கொண்டு வரக்கூடாது என்பது தொடர்பான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக கூர்மையான பொருள்கள், கத்தரிக்கோல், ஆயுதங்கள், பாக்கெட் கத்திகள், பிளேடுகள், கத்திகள், பெப்பர் ஸ்பிரே, பெரிய சங்கிலிகள் போன்றவை கொண்டு வரக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் லேசர் லைட்டுக்ள், செல்லப்பிராணிகள், அதிக ஒலி எழுப்பக்கூடிய இசைக்கருவிகள்,, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் புகையிலை மற்றும் போதைப்பொருள் குடைகள், தண்ணீர் பாட்டில்கள் , கூல் டிரிங்க்ஸ் பாட்டில்கள், வெளிப்புற உணவு மற்றும் பானங்கள் அனுமதியில்லையென கூறப்பட்டுள்ளது.