தமிழக பாடத்திட்டத்தின் தரம் மோசமா.!! ஆளுநர் ரவிக்கு எதிராக களம் இறங்கிய நெட்டிசன்கள்
தமிழக ஆளுநர் ரவி, மாநில பாடத்திட்டத்தை விட தேசிய பாடத்திட்டம் சிறந்தது என்றும், தமிழக மாணவர்களின் திறன் குறைவாக உள்ளது என்றும் கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், நெட்டிசன்கள் ஆளுநரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
திமுக அரசு- ஆளுநர் ரவி மோதல்
தமிழகத்தில் ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த 3ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிவருகிறார். ஆரம்பம் முதல் தற்போது வரை திமுக அரசின் செயல்பாட்டிற்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வருவதால் மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. தமிழ்நாட்டை தமிழகம் என மாற்ற முயற்சி, கல்லூரி விழாவில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை பேசுவது, தமிழக அரசின் திட்டங்களுக்கு தடை விதிப்பது, சட்டமன்றத்தில் அமைச்சரவை ஒப்புதல் கொடுத்த உரையை பேச மறுப்பது, தன்னிச்சையாக துணைவேந்தர்கள் மாநாடு நடத்துவது என தொடர்ந்து திமுக அரசை விமர்சித்து கருத்து தெரிவித்து வருகிறார்.
தேசிய கல்வி கொள்கை
இந்தநிலையில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த தமிழக அரசு மறுப்பு தெரிவித்திருந்தது. இதனால் தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை.நிதி நெருக்கடி காரணமாக ஆசிரியர்களுக்கு சரியான முறையில் ஊதியம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வியும் பாதிப்படையும் நிலை உருவாகியுள்ளது. எனவே மத்திய அரசு தமிழகத்திற்கு விடுவிக்க வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.
மாணவர்களுக்கு அறிவு இல்லை
இந்த சூழலில் ஆளுநர் ரவி சென்னையில் நேற்று தனியார் கல்லூரி விழாவில் பங்கெடுத்தார். அப்போது பேசிய அவர், தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும்போது, மாநில பாடத்திட்டத்தின் தரம் மோசமாக உள்ளதாக தெரிவித்தார். தமிழக மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் போன்றவற்றில் அறிவுத்திறன் குறைவாக உள்ளதாகவும் விமர்சித்தார். பள்ளி மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் கூறினார். ஆளுநரின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நெட்டிசன்கள் கிண்டல்
ஆளுநர் ரவியின் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், நெட்டிசன்கள் ஆளுநரை வறுத்தெடுத்து வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் கல்வி அறிவு அதிகமாக இருப்பதால் தான் இங்கையே வேலை பார்க்கின்றனர். இங்கிருந்து பீகாருக்கு செல்லவில்லை. பீகாரில் இருந்து தான் தமிழகத்திற்கு வருகிறார்கள் என பதிவிட்டுள்ளனர். பீகாரில் கல்வி அறிவு மோசமாக இருப்பதை பற்றி பேசாத ஆளுநர் தமிழகத்தை குறை சொல்ல வந்துவிட்டார் என விமர்சித்து வருகின்றனர்.
பீகாரில் எந்த நிலையில் கல்வி.?
மாநில பாடத்திட்டத்தில் எங்க பிள்ளைகளை படிக்கவைச்சு தான் மொத்த தமிழ்நாடே பொருளாதரத்திலும், தொழில்நுட்பத்திலும் முன்னோறி இருக்கு. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உங்க தேசிய பாடதிட்டத்தில படிச்சவன் எல்லாம் தமிழ்நாட்டில் வந்து குப்ப கொட்டுறான் என பதிவு செய்யப்பட்டுள்ளது. உங்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் எந்த சமாபந்தமும் இல்லை. ஏதோ இங்கேயே பிறந்து வளர்ந்தது போல எல்லாவற்றிலும் குறை கண்டுபிடிக்கும் நீங்கள் உங்கள் பிறந்த மாநிலமான பிகாரின் கல்வி நிலைக்கு ஏதாவது செய்ய தோன்றவில்லையா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.