அடப்பாவிங்களா! என் புள்ளையையும் மருமகளையும் கொன்னுட்டீங்களே.. திருமணமான 3 நாட்களில் காதல் தம்பதி படுகொலை.!
தூத்துக்குடியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்த ஜோடி வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முருகேசன் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் வசந்தகுமார். இவரது மகன் மாரிசெல்வம்(23). இவர் ஷிப்பிங் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார். இவருக்கும் தூத்துக்குடி திருவிக நகர் பகுதியை சார்ந்த கார்த்திகா(23) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியது. இவர்களது காதல் விவகாரம் இருவீட்டார் பெற்றோருக்கு தெரியவந்தது. ukudi
இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் மாரிச்செல்வம் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர் என்பதால் கார்த்திகாவின் குடும்பத்தினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். வேறு வழியில்லாமல் வீட்டை விட்டு வெளியேறி காதல் ஜோடி கடந்த அக்டோபர் 30ம் தேதி கோவில்பட்டியில் பதிவு திருமணம் செய்துகொண்டனர். மாரி செல்வத்தின் காதல் திருமணத்தை அவரது வீட்டில் ஏற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டதால் மாரிச்செல்வம், கார்த்திகா மட்டும் தனியாக இருந்துள்ளனர். அப்போது நேற்று மாலை 6 மணியளவில் 3 இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் நுழைந்து கண்ணிமைக்கும் நேரத்தில் இருவரையும் சராமரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியது. இது தொடர்பாக அப்பகுதியினர் தூத்துக்குடி சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கார்த்திகா, மாரிச் செல்வம் ஜோடியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக 3 தனிப்படையை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம், ஆட்களை வைத்து இருவரையும் கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதான தகவல் வெளியாகியுள்ளது. காதல் திருமணம் ஜோடி மூன்று நாளில் பெண் வீட்டாரால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.