இந்த மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை எப்போது கிடைக்கும் தெரியுமா? வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 10ம் தேதியே பயனாளிகளின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தது. இதற்காக தமிழக அரசு ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து, தமிழகம் முழுவதும் சுமார் 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் 60 லட்சம் பேர் பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டனர்.
இந்த திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதற்காக ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த மாதம் 15ம் தேதி ஞாயிற்றுகிழமை என்பதால் 14ம் தேதியே குடும்பத்தலைவிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது.
இந்நிலையில், இம்மாதம் தீபாவளி பண்டிகை 12ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் முன்கூட்டியை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் குடும்ப தலைவிகள் இருந்து வந்தனர்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை கருத்தில் கொண்டு முன்கூட்டியே பெண்களுக்கான உரிமை தொகையை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது உறுதியாகியுள்ளது. வரும் 10ம் தேதி வங்கிகளில் பணம் இருப்பு வைக்கப்படும் என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.