இன்று வெளியாகிறதா தமிழக அமைச்சரவை மாற்றம்.? யாருக்கெல்லாம் வாய்ப்பு.?
திமுக ஆட்சியில் அமைச்சரவை மாற்றம் குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என்றும், சில அமைச்சர்கள் நீக்கப்பட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடு பயணத்திற்கு முன்பு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக அரசும் - அமைச்சரவை மாற்றமும்
தமிழகத்தில் அதிமுக தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்த நிலையில் அதனை தட்டிப்பறித்து மீண்டும் ஆட்சி அமைத்தது திமுக, 3ஆண்டுகள் முடிவடைந்து 4வது ஆண்டை நோக்கி திமுக ஆட்சி சென்று கொண்டுள்ளது. இந்த 3ஆண்டில் அமைச்சர் நாசர் மட்டும் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் புதிய அமைச்சராக உதயநிதி மற்றும் டிஆர்பி ராஜா இடம்பெற்றனர். அதே நேரத்தில் ஒரு சில அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றி அமைக்கப்பட்டது.
துணை முதலமைச்சராகும் உதயநிதி
இந்தநிலையில் தற்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என தொடர்ந்து குரல் எழுந்துள்ளது. அந்த வகையில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் இதற்கு பதில் அளித்த திமுக தலைவரும் முதலமைச்சர் ஸ்டாலின், கோரிக்கை வந்துள்ளது. ஆனால் இன்னும் அது பழுக்கவில்லையென தெரிவித்தார். இந்தநிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் 17 நாட்கள் பயணமாக வருகிற 27ஆம் தேதி அமெரிக்கா செல்லவுள்ளார்.
தப்பிக்குமா அமைச்சர் பொன்முடி பதவி.! இன்று என்ன சொல்லப்போகிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
23ஆம் தேதிக்குள் புதிய அமைச்சரவை
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இந்த பயணம் அமையவுள்ளது. முக்கிய தொழில் அதிபர்களை சந்திக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடு செல்வதற்கு முன்பு உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பும், அமைச்சர்களின் இலாக்காக்களும் மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இன்று அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. இன்று அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில் வருகிற 23ஆம் தேதிக்குள் புதிய அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என தெரிகிறது.
யாருக்கெல்லாம் வாய்ப்பு.?
தற்போது அமைச்சரவையில் உள்ள காந்தி மற்றும் மனோ தங்கராஜ் ஆகியோர் நீக்கப்பட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது. அதே போல டெல்டா மாவட்டத்தை சேர்ந்த திமுக சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவிக்கான வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது. மேலும் ஏற்கனவே அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்ட நாசருக்கு மீண்டும் பதவி வழங்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எதுவாக இருந்தாலும் இன்றோ அல்லது நாளையோ அமைச்சரவை மாற்றம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.