மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இவ்வளவு தானா.? கிடு, கிடுவென குறைந்த நீர்மட்டம்
மேட்டூர் அணைக்கு இன்று 90வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவில் இருந்து குறைந்துள்ளது. நீர் வரத்தை விட நீர் வெளியேற்றம் அதிகமாக இருப்பதால் நீர் மட்டம் குறைய தொடங்கியுள்ளது.
மேட்டூர் அணையும்- காவிரியும்
விவசாயிகளின் கடவுளாக காவிரி ஆறு உள்ளது. காவிரி ஆற்றில் தண்ணீர் வந்தால் விவசாயமும் கை கொடுக்கும், அந்த வகையில் கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக மேட்டூர் அணையில் உரிய தண்ணீர் இல்லாத காரணத்தால் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்க முடியாத நிலை உருவானது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 மொத்த அடியில் 40 அடி மட்டுமே கடந்த மாதம் முதல் வாரத்தில் இருந்தது. இதனையடுத்து காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள அணைகள் முழு கொள்ளளவை எட்டியது.
கிடு,கிடுவென உயர்ந்த நீர்மட்டம்
இதனால் வெறு வழியின்றி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. முதலில் 12ஆயிரம் கன அடியாக திறக்கப்பட்ட நீர், ஒரு கட்டத்தில் 2 லட்சம் கன அடி அளவிற்கு திறக்கப்பட்டது. இதனால் காவிரியில் வெள்ளம் ஏற்பட்டது. மேட்டூர் அணையின் நீர் மட்டமும் உயர்ந்தது. கிடு, கிடுவென உயர்ந்து நீர்மட்டம் ஜூலை 30ஆம் தேதி முழு கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து ஒரு லட்சத்து 65ஆயிரம் கன அடி நீர் முழுவதுமாக 16 கண் பாலம் வழியாக பாசனத்திற்கு வெளியேற்றப்பட்டது. இதனால் காவிரி கரையோர பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளித்தது.
மழை நின்றது- நீர் வரத்தும் குறைந்தது
காவிரி நீர் கடைமடை வரை சென்று சேர்ந்துள்ளது. இதனிடையே காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததையடுத்து கர்நாடகவில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீர் அளவு குறைந்தது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வரை 40ஆயிரம் கன அடி நீர் வந்த நிலையில் நேற்று 10ஆயிரம் கன அடி நீர் வந்தது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டது. இன்று காலை வினாடிக்கு 8 ஆயிரத்து 563 கனஅடியாக குறைந்தது.
மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது
இருந்த போதும் டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருவகிறது. அணைக்கு வரும் நீரை விட வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.76 அடியாக குறைந்தது. எனவே வரும் நாட்களில் மழையை பொறுத்து மேட்டூர் அணை மீண்டும் தனது முழு கொள்ளவை எட்டுமா என விவசாயிகள் காத்துள்ளனர்.