Tasmac Closed : நாளை மதுபானம் விற்பனை செய்யக்கூடாது.. டாஸ்மாக் கடைகளை மூடுங்கள்- ஆட்சியர் அதிரடி உத்தரவு
சுதந்திர தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நிதியை கொட்டிக்கொடுக்கும் டாஸ்மாக்
தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அந்த திட்டங்களை சிறப்பாக செய்து முடிக்க நிதியை அள்ளிக்கொடுக்கும் அட்ஷய பாத்திரமாக இருப்பது டாஸ்மாக் துறை. தினந்தோறும் 50 முதல் 100 கோடி ரூபாய் மதிப்பிற்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட நாட்களில் இந்த விற்பனை இரண்டு மடங்காக அதிகரிக்கிறது. இதனால் தமிழக அரசு மது விற்பனையே முக்கிய வருவாயாக உள்ளது.
மதுக்கடைகளை மூட வலியுறுத்தல்
கடந்த ஆண்டு மட்டும் 45 ஆயிரத்து 855 கோடியே 67 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை மூலம் வருவாய் ஈட்டப்படுள்ளது. மதுவிற்பனையில் தமிழகம் சாதித்து வரும் நிலையில், இளைய சமுதாயம் பாதிக்கப்படுவதாகவும், இதனை கருத்தில் கொண்டு மதுபான கடைகளை குறைக்க தொடர்ந்து அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அதே நேரத்தில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு நாள், மே தினம், சுதந்திர தினம், நபிகள் நாயகம் பிறந்த நாள், காந்தி ஜெயந்தி என 8 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.
சுதந்திர தினம்- டாஸ்மாக் லீவு
இந்தநிலையில் நாளை சுதந்திர தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர்ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள உத்தரவில், வியாழக்கிழமை (15.08.2024) அன்று சுதந்திர தினத்தில் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள். FL2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள்.
பார்களை திறந்தால் - ஆட்சியர் எச்சரிக்கை
FL3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் FL3(A), FL3(AA) மற்றும் உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு 15.08.2024 (வியாழக்கிழமை) சுதந்திர தினம் அன்று மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவை தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.