ஆடி பெருக்கில் மக்களுக்கு ஷாக் தகவல்- கிடு, கிடுவென உயர்ந்த பூக்கள் விலை- ஒரு கிலோ மல்லிகை எவ்வளவு தெரியுமா.?
ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி மலர்ச்சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாளை மற்றும் நாளை மறு தினம் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆடி மாதம் மழை காலத்தின் துவக்க மாதம் என்பதால் நீர்பிடி இடங்களில் பெய்த மழையின் காரணமாக ஆறுகளில் நீர் பெருகி வரும். ஆடிப்பெருக்கு தினத்தில் விவசாயத்தை செழிக்க வைக்கும் காவிரி ஆற்றைவழிபடுவது வழக்கம். அதனால் ஆடிப்பெருக்கில் நீர் நிலைகளுக்கு சென்று நீராடுவதும், வழிபடுவதும் முக்கியமானதாக சொல்லப்படுகிறது. இந்த நாளில் பெண்கள் தங்களின் ஆயுள் அதிகரிக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு, தாலிக்கயிறு மாற்றிக் கொள்ளும் பழக்கம் உள்ளது.
அந்த வகையில் ஆடிப்பெருக்கு தினத்தில் காவிரியில் பொதுமக்கள் புனித நீராடுவார்கள். அம்மா மண்டபம் உள்ளிட்ட படித்துறைகளில் உரிய பாதுகாப்புடன் பொதுமக்கள் குளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் காவிரிநீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி ஆடி அமாவசை தினமும் வருகிறது. இந்த நாளில் ராமேஸ்வரம் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் முன்னோர்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்படும்
இதனால் தொடர் விஷேச நாட்கள் வருவதால் பூக்களின் விலையானது சந்தையில் அதிகரித்துள்ளது. அந்த வகையில் ஆடிப்பெருக்கு மற்றும் அமாவாசை தினங்களையொட்டி மதுரை மாட்டுத்தாவணி மலர்ச்சந்தையில் பூக்கள் விலை சற்று அதிகரித்துள்ளது.
குறிப்பாக ஒரு கிலோ மல்லிகை பூ 800 ரூபாய்க்கும், முல்லைப்பூ கிலோ 600 ரூபாய்க்கும், கனகாம்பரம் 500 ரூபாய்க்கும், பிச்சிப்பூ கிலோ 700 ரூபாய்க்கும், செவ்வந்தி 250 ரூபாய்க்கும், அரளி 200 ரூபாய்க்கும், சம்பங்கி கிலோ 80 ரூபாய்க்கும் ரோஸ் 150 ரூபாய்க்கும், மரிக்கொழுந்து 150 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து ஆடி பெருக்கு மற்றும் ஆடி அமாவசை தினங்கள் வருவதால் வருகின்ற திங்கள்கிழமை வரை பூக்கள் விலை உயர்ந்தே இருக்கும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.