மேட்டூர் அணைக்கு நீர் வரத்து கிடு, கிடுவென சரிவு.! கர்நாடகாவில் இருந்து இவ்வளவு தான் தண்ணீர் வருகிறதா.?
கர்நாடகாவில் பெய்த கனமழையால் மேட்டூர் அணை நிரம்பி, டெல்டா பகுதிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், மழை நின்றதால் நீர்வரத்து குறைந்து, அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. மழையின் தீவிரத்தை பொறுத்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காவிரியும் மேட்டூரும்
விவசாயிகளின் வாழ்வாதரமாக இருப்பது காவிரி ஆறு, கர்நாடக மாநிலத்தில் மேற்கு மலை தொடர்ச்சி பகுதியில் உருவாகும் காவிரி பல்வேறு மாவட்டங்களை கடந்து தமிழகத்திற்கு வருகிறது. தமிழக எல்லையான பில்லிக்குண்டுவில் இருந்து ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை சென்று சேர்கிறது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் காவிரி நீரால் டெல்டா பகுதிகளில் மட்டும் 12 மாவட்டங்கள் பயன்பெறும். அந்த வகையில் மேட்டூர் அணையில் நீர் இருந்தால் விவசாயம் செழிப்பாக இருக்கும்.
தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா
இந்தநிலையில் தான் கடந்த 2 ஆண்டுகளாக மேட்டூர் அணையில் உரிய தண்ணீர் இல்லாத நிலை நீடித்தது. இதனால் வழக்கம் போல் ஆண்டு தோறும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படும் தண்ணீரும் திறக்கப்படவில்லை.கர்நாடகா மாநிலமும் தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்திருந்தது. பல சட்ட போராட்டங்கள் மேற்கொண்டிருந்த நிலையில் 8ஆயிரம் கன அடி நீர் மட்டுமே திறக்கப்படும் என அறிவித்தது கர்நாடக அரசு. ஆனால் கர்நாடகா நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக கபிணி மற்றும் கேஎஸ்ஆர் அணைகள் வேகமாக நிரம்பியது
மேட்டூர் அணை திறப்பு
இதனால் கர்நாடகா அணைகளில் இருந்து 2 லட்சம் கன அடி அளவிற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணையும் ஒரே வாரத்தில் தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனையடுத்து மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் பாசனத்திற்கு திறக்கப்பட்டது. உபரி நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்ட நிலையில் கடைமடை வரை தண்ணீர் சென்று சேர்ந்தது. இந்த நிலையில் கர்நாடாக நீர் பிடிப்பு பகுதியில் மழை முழுவதுமாக நின்றதால் தண்ணீர் திறப்பு குறைப்பட்டடது.
மேட்டூர் நீர் மட்டம் குறைந்தது
படிப்படியாக குறைந்த நீரால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் வெகுவாக குறைந்தது. இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணைக்கு 4551 அடியாக வரத்து உள்ளது. அணையின் நீர் மட்டம் 116 அடியாக உள்ளது. இருந்த போதும் மேட்டூர் அணையில் இருந்து 12700 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. வரும் நாட்களில் மழையின் தீவிரத்தை பொறுத்து மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு தொடர்பாக முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.