Mettur : தீடீரென குறைந்த மேட்டூர் அணை நீர் வரத்து.! கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு என்ன?
மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் இருந்து ஒரு லட்சம் கன அடிக்கு மேல் நீர் வரத்து வந்த நிலையில், தற்போது மழை குறைந்ததையடுத்து கர்நாடக அணைகளில் இருந்து 36ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது
Mettur Dam
மேட்டூர் அணையும் விவசாயமும்
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் செழிக்க முக்கிய பங்கு வகிப்பது காவிரி ஆறாகும். காவரியில் வரும் தண்ணீர் டெல்டா பகுதிகளில் உள்ள 12 மாவட்டங்களில் வாழ்வாதரமாக உள்ளது. ஆண்டு தோறும் குறுவை சாகுபடிக்கு ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படும். ஆனால் மேட்டூர் அணையில் நீர் இருப்பு 35 முதல் 40 அடி மட்டுமே இருந்ததால் தண்ணீர் திறக்க முடியாத நிலை உருவானது. இதனையடுத்து கர்நாடக மாநிலமும் தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை தரவில்லை.
KRS DAM WATER LEVEL
கொட்டிய மழை- நிரம்பிய அணைகள்
இந்தநிலையில் தான் கர்நாடகா மற்றும் கேரளாவில் பெய்த கன மழையின் காரணமாக நீர் பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் நிரம்பியது. கர்நாடக அணைகளான கேஆர்எஸ் மற்றும் கபினி முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணைக்கு வரும் உபரி நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டது. 8 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே திறக்க முடியும் என தெரிவித்த கர்நாடகா அரசு ஒரு கட்டத்தில் 2 லட்சம் கன அடி நீரை திறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
கிடு, கிடுவென உயர்ந்த மேட்டூர் அணை
இதனால் வறண்டு காணப்பட்ட மேட்டூர் அணை கிடு, கிடுவென உயர்ந்தது. இதனையடுத்து மேட்டூர் அணையும் தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டிய நிலையில் உபரி நீரை காவரியில் திறக்கப்பட்டது. இதனால் கடைமடை வரை காவரி சென்று கொண்டுள்ளது.
Mettur dam full 12 dist warning
நீர் வரத்து குறைந்தது
இந்த சூழ்நிலையில் தான் கர்நாடக மாநில நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததையடுத்து அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்தது. இதனால் கர்நாடகாவின் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து காவிரியில் வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 36,996 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 33,454 கன அடியும், கபினி அணையில் இருந்து 3542 கன அடியும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது
தண்ணீர் வெளியேற்றம் குறைந்தது
இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை நிலவரப்படி தண்ணீர் வெளியேற்றம் விநாடிக்கு 70,000 கன அடியில் இருந்து 50,000 கன அடியாக குறைந்துள்ளது. அணைக்கு நீர் வரத்து 73,330 கன அடியாகவும், அணையின் நீர் மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.630 டி.எம்.சி ஆகவும் உள்ளது.
முக்கொம்பிற்கு நீர் வரத்து என்ன.?
திருச்சி முக்கொம்புக்கு நீர் வரத்து விநாடிக்கு 64,100 கன அடியாக உள்ளது. காவிரியில் 28,500 கன அடியும், கொள்ளிடத்தில் 35,000 கன அடியும், கிளை வாய்க்காலில் 600 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் மழையின் தாக்கத்தை பொறுத்து கூடுதல் நீர் திறக்கப்படுமா.? அல்லது குறைக்கப்படுமா என்பது தெரியவரும்.