கோவை, மதுரை, சென்னைக்கு அடித்தது அதிர்ஷ்டம்; வருகிறது பிரம்மாண்ட தொழிற்சாலைகள்!!
தமிழ்நாடு முதலமைச்சரின் அமெரிக்கப் பயணத்தின்போது, 6 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.900 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த முதலீடுகள் சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் 4,100 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
முதலமைச்சர் ஸ்டாலி்ன அமெரிக்கா பயணம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 17 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இந்தநிலையில் அமெரிக்கா நாட்டின், சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னை, கோவை மற்றும் மதுரையில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
நோக்கியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
நோக்கியா நிறுவனமானது ஃபின்னிஷ் பன்னாட்டு தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் நுகர்வோர் மின்னணு நிறுவனம் ஆகும். இது ஒரு பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும். சென்னையில் நோக்கியா நிறுவனம் பன்னாட்டு விநியோக மையம் மற்றும் உற்பத்தி நிலையத்தை நிறுவி செயல்பட்டு வருகிறது.
இந்தநிலையில் முதலமைச்சர் முன்னிலையில் நோக்கியா நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 450 கோடி ரூபாய் முதலீட்டில், 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில், சிறுசேரி சிப்காட்டில் உலகின் மிகப்பெரிய நிலையான நெட்வொர்க் சோதனை வசதி கொண்ட புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
பேபால் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
பெபால் ஹோல்டிங்க்ஸ் நிறுவனம் (PayPal Holdings, Inc.) அமெரிக்க பன்னாட்டு நிதி தொழில்நுட்ப நிறுவனமாகும், இது ஆன்லைன் பணப் பரிமாற்றங்களை ஆதரிக்கும் பெரும்பாலான நாடுகளில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைக்கு உதவுகிறது. பேபால் நிறுவனம் சென்னையில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் பேபால் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே சுமார் 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவிற்கான மேம்பட்ட வளர்ச்சி மையம் (Advanced development center focussed on AI) அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
. அமெரிக்க நாட்டின், கலிபோர்னியாவின் ஃப்ரீமாண்ட் நகரத்தை தலைமையிடமாக கொண்டு ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இந்நிறுவனம் கோவையில் பொறியியல் மையத்தை நிறுவி செயல்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 150 கோடி ரூபாய் முதலீட்டில் 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் கோயம்புத்தூர் சூலூரில் குறைக்கடத்தி உபகரணங்களுக்கான தயாரிப்பு மேம்பாடு மற்றும் உற்பத்தி வசதி (Product development and manufacturing facility for Semiconductor equipment) அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
மைக்ரோசிப் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
அரிசோனாவின் சாண்ட்லர் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மைக்ரோசிப் நிறுவனம், உலகளவில் அமெரிக்கா, சீனா, தாய்லாந்து, தென் கொரியா போன்ற நாடுகளில் பல உற்பத்தி நிலையங்களை கொண்டுள்ளது. இந்நிறுவனம் பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும்.
சென்னையிலுள்ள இந்நிறுவனத்தில் சுமார் 550 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மைக்ரோசிப் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 250 கோடி ரூபாய் முதலீட்டில் 1500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் குறைக்கடத்தி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் (R&D Center in Semiconductor Technology) அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இன்பிங்ஸ் ஹெல்த்கேர் நிறுவனத்துடன் (Infinx Healthcare) புரிந்துணர்வு ஒப்பந்தம்
இன்பிங்ஸ் ஹெல்த்கேர் ஒரு முன்னோடி சுகாதார தொழில்நுட்ப நிறுவனமாகும். இந்நிறுவனம் நோயாளிகளுக்கு விரைந்து உதவக்கூடியவை, உரிமைகோரலின் துல்லியம் மற்றும் ஒருமைப்பாட்டை மேம்படுத்துகின்றன, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் நிறுவனம் கலிபோர்னியாவின் சான் ஜோஸ் நகரை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இந்நிறுவனம் தொழில் தொடங்கிட கடந்த ஜூலை மாதம் மதுரையில் உள்ள எல்காட்டில் அலுவலக இடத்தை தேர்வு செய்துள்ளது.
இன்பிங்ஸ் ஹெல்த்கேர் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 50 கோடி ரூபாய் முதலீட்டில் 700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மதுரை எல்காட்டில் தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய விநியோக மையம் (Technology and Global Delivery Center) அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.