செல்லும் இடமெல்லாம் சர்ச்சை... யார் இந்த TTF வாசன்? சப் இன்ஸ்பெக்டரின் மகன் யூடியூபர் ஆனது எப்படி?
எங்கு சென்றாலும் சர்ச்சையில் சிக்கும் பிரபல யூடியூபரான டிடிஎப் வாசன் பற்றியும், அவரின் பைக் கலெக்ஷன் பற்றியும் இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
TTF Vasan
கோவை காரமடை அருகே உள்ள மலை கிராமமான வெள்ளியங்காடு என்கிற பகுதியை சேர்ந்தவர் டிடிஎப் வாசன். சிறுவயதில் இருந்தே பைக்குகள் மீது அதீத ஆர்வம் கொண்ட வாசனுக்கு, 10-ம் வகுப்பில் அதிக மார்க் எடுத்தால் பைக் வாங்கி தருகிறேன் என சொல்லியிருக்கிறார் வாசனின் தந்தை பாண்டியன். டிடிஎப் வாசனின் தந்தை பாண்டியன் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் ஆவார். 10ம் வகுப்பில் நன்கு படித்து 400 மார்க் எடுத்த வாசனுக்கு சொன்னபடியே பைக் வாங்கி கொடுத்திருக்கிறார் அவரது தந்தை பாண்டியன்.
youtuber TTF Vasan
சில நாட்களில் வாசனின் தந்தை உயிரிழந்துவிட, கல்லூரியில் படித்துக்கொண்டே பார்ட் டைம் வேலையும் பார்த்து வந்திருக்கிறார் வாசன். அப்போது சம்பாதித்த பணத்தை வைத்து 1.5 லட்சத்திற்கு தனக்கு பிடித்த யமஹா வண்டியையும் வாங்கி இருக்கிறார். அந்த பைக்கில் நீண்ட தூரம் பயணம் செய்து அதனை வீடியோவாக எடுத்த வாசன், டுவின் திராட்லர்ஸ் பேமிலி என்கிற யூடியூப் பக்கத்தை தொடங்கி அதில் வீடியோவாக பதிவிட்டு வந்திருக்கிறார்.
ஹெல்மெட்டில் கேமரா, செல்லும் இடங்களைப் பற்றிய வர்ணனை என ஜாலி ரைடு சென்ற டிடிஎப்பின் பயணத்தை பார்க்க திரண்டது ஒரு ரசிகர்கள் கூட்டம். வாசனின் வீடியோக்களுக்கு தொடர்ந்து அமோக ஆதரவு கொடுத்த அவரது ரசிகர்களால், யூடியூப்பில் மில்லியன் கணக்கில் பாலோவர்களும் கிடைத்தனர். அவர்களையெல்லாம் டிடிஎப் பேமிலி என அழைத்த வாசன், தனக்கான ஒரு கூட்டமாகவே கருதினார்.
TTF Vasan bike collection
கவாசகி, ராயல் என்பீல்டு, ஆர் 15, அப்பாச்சி என விதவிதமான வண்டிகளை வைத்திருக்கும் வாசன், அதற்கு லாலிபாப், பீனிக்ஸ் என செல்லப்பெயர்களையும் வைத்திருக்கிறார். இதில் லேட்டஸ்டாக வாசன் பயன்படுத்தி வரும் கவாசகி பைக்கின் விலை மட்டும் 10 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாம். சூப்பர்பைக் என இதனை கொண்டாடி வருகிறார் வாசன். இப்படி யூடியூப்பில் வீடியோ போடும் வாசனுக்கு உதவியாக இருப்பது அவரது நண்பர்களான அஜீஸ், அருண் ஆகிய இருவர் தான். வீடியோ எடுப்பதும் அதை எடிட் செய்து யூடியூப்பில் பதிவிடுவது என அத்தனைக்கும் இவர்களின் உதவி பிரதானமாக இருக்கிறது.
TTF Vasan fans
லடாக், நேபாளம் வரை சென்றிருக்கும் வாசனுக்கு, லண்டன் வரை தன்னுடையை சூப்பர் பைக்கில் செல்ல வேண்டும் என்கிற கனவும் இருக்கிறது. தான் செல்லும் இடங்களையெல்லாம் முன்கூட்டிய அறிவித்துவிட்டு வருவதால், இவரைப்பார்க்க திரண்டு வரும் ரசிகர்களை போலீசார் கட்டுப்படுத்த முடியாமல் திணறியதை கண்கூடாக பார்க்க முடிகிறது. அப்படி கடந்தாண்டு கடலூருக்கு வந்த வாசனை பார்க்க படையெடுத்து வந்து பளார் என அடிவாங்கியதை டிடிஎப் பேமிலி அவ்வளவு எளிதாக மறந்திருக்க முடியாது.
இதையும் படியுங்கள்... மாஸ் காட்ட நினைத்த மஞ்சள் வீரனுக்கு மாவுக்கட்டு! விபத்தில் சிக்கினாலும் விடாத போலீஸ் - TTF மீது வழக்குபதிவு
TTF Vasan income
இயக்குனர் செல் அம் என்பவரின் அலுவலகத்தை திறக்க வந்தபோது தான் இந்த சம்பவம் அரங்கேறியது. அந்த செல் அம்மின் இயக்கத்தில் தான் தற்போது மஞ்சள் வீரன் என்கிற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் வாசன். வேலைக்கு செல்லும் எண்ணமில்லை என்று ஓப்பனாக சொல்லும் வாசன், பைக் பயணம் மற்றும் யூடியூப் வருமானத்தையே நம்பி இருக்கிறார். அவர் வெளியிடும் வீடியோக்கள் அனைத்தும் லட்சக்கணக்கில் பார்வைகளைப் பெற்று டிரெண்டிங்கில் இருப்பதால், அவருக்கு யூடியூப் மூலம் மட்டும் மாதந்தோறும் நான்கு முதல் ஐந்து லட்சம் வரை வருமானம் வருகிறது.
TTF Vasan accident
வருமானத்தில் இருந்து கணிசமான தொகையை வாகனத்தை பராமரிக்க செலவிட்டு வருகிறார் வாசன். கோவையில் அவர்மீது ஏற்கனவே வழக்குகள் பதிவாகி உள்ள நிலையில், தற்போது ஆபத்தை விளைவிக்கும் வகையில் பைக் ஓட்டியதால் காஞ்சிபுரத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே பலமுறை வாசனை விட்டுபிடித்துள்ள கோவை காவல்துறை தொடர்ந்து அவரை கண்காணித்தும் வருகிறது.
இளைஞர்கள் பலரும் அதிவேகமாக வாகனத்தை இயக்கி, விபத்தில் சிக்கும்போதெல்லாம் வாசனின் தவறான முன் உதாரணம் என்கிற கருத்து முன்வைக்கப்படும். இனிமேலாவது அதிவேகம் ஆபத்து என்பதை வாசன் புரிந்துகொண்டாலே போதும் என்பது தான் பலரும் அவருக்கு கூறும் அறிவுரையாக உள்ளது.
இதையும் படியுங்கள்... பைக்கில் வீலிங் செய்து கொடூர விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன்..! உடல்நிலை எப்படி உள்ளது என தெரியுமா.?